Load Image
Advertisement

கிருஷ்ண ஜெயந்தியன்று எவ்வாறு வழிபட வேண்டும்?

கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும். அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும். வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement