Load Image
Advertisement

திருவண்ணாமலை தீப திருவிழா: காவல் தெய்வம் பிடாரி அம்மனுக்கு உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், விழா இனிதே நடக்க வேண்டி, கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நாளை நடக்க உள்ளது. நேற்று கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, சாதம், காய்கறி, வடை, பாயசம், வைத்து படையலிடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, சிம்ம வாகனத்தில், பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் விழாவில் இன்று, நடக்கும் விநாயகர் உற்சவத்தில், அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்ஹிரகணம் வழிபாடு நடத்தப்பட்டு விநாயகர், மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

நாளை கொடியேற்றம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும், தீப திருவிழா நாளை, கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன், மற்றும் உற்சவர் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடி மரத்தில், சதுர்த்தி திதி, பூராட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய காலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது. முக்கிய விழாவான, ஏழாம் நாள் விழாவான, டிச., 3ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், வரும், டிச., 6ல், அதிகாலை, 4:00, மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த மஹா தீபத்தை, 2,500பக்தர்கள் மட்டும் மலை உச்சிக்கு சென்று தரிசனம் காண அனுமதிக்கப்படுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement