Load Image
Advertisement

மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு பலன்.. நிம்மதியான காலம்

அசுவினி: சாதனை படைப்பீர்கள்

எடுத்துக் கொண்ட செயலில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி சாதனை புரிந்து வாழ்க்கை நடத்தும் அமைதியான நிதான உள்ளம் கொண்ட அசுபதி நட்சத்திர அன்பர்களே நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர்.

இந்த வருடம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப் பெறும். தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகலாம். ஆனாலும் நல்ல பராமரிப்பின் காரணமாக உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தன லாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும்.
குடும்பத்தில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் சனியின் நற்செயல்கள் இருக்கும். தந்தைவழி உறவினர்களால் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெறுவார்கள். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் வகையில் தடைகள் வந்து விலகும். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேதவாக்காக கருதப்படும். உங்களது நற்செயல்களால் நிலைத்த புகழும் சக ஊழியர்களால் அதிகம் நேசிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும்.
தொழிலதிபர்கள் புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். ஆடம்ப பர்னிச்சர் பொருட்களை உற்பத்தியாளர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள். வீடு மனை விற்பவர்கள் அபிவிருத்தி அடைவர்.
பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பவர் உணவு பண்டங்களை தயாரிப்பவர்கள் அழகு பொருட்களை கை வேலைப்பாட்டினால் உருவாக்கும் பணி செய்பவர்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் காண்பர். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும்.
கலைஞர்கள், சினிமா, நாடகம், சின்னத்திரை ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் அக்கறையுடன் செயல்பட்டு பொருளாதார வளமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ச்சி காண்பர். அரசியலுடன் தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். சனிபகவானின் நல்லருளால் மக்கள் ஆதரவுடன் உயர்பதவிகளைப் பெறுவர்.
மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு கல்வியில் சாதனை படைப்பர். தொழில் நுட்ப பயிற்சி பெறும் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெறுவர். கல்வி வளர்ச்சிக்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாக கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் மகிழும் விதத்தில் உங்கள் வளர்ச்சியும் செயல்பாடும் இருக்கும்.
பரிகாரம்: விநாயகரை வணங்க கஷ்டங்கள் அகலும்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
பரணி: நிம்மதியான காலம்

கனிவே பெருமை என்பதற்கேற்ப கவர்ச்சிகரமான தோற்றமும், கனிவான பேச்சும், தெளிவான சிந்தனையும் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் பரணி நட்சத்திர அன்பர்களே, உங்களின் மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். உயர்வான செயல்களைச் செய்வீர்கள்.
நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். கடந்த காலச் சுமைகள் நீங்கும். மனநிம்மதியும், அமைதியும் காண்பீர்கள். பொது காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளில் வசதிக்கேற்ப மாறுதல் செய்வீர்கள்.
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயதான பெற்றோருக்கு பிள்ளைகளால் தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்திக்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு நல்ல பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
அதிகாரிகள் தங்களின் கீழே பணியாற்றும் ஊழியர்களிடம் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி பேச்சு, செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். அரசாங்கத்தின் ஆதரவான நிலைப்பாடுகள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.
பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்களின் தொழிலில் முன்னேற்றம் அடைவர். இருசக்கர, நான்குசக்கர வாகன விற்பனையாளர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கம் கண்டு வியாபார உத்திகளை மாற்றி புதிய விற்பனை சந்தைகளை எட்டிப்பிடிப்பார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக விரிவாக்கப்பணிகள், சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும்.
நடிப்பு தொழிலை மேற்கொள்ளும் கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். சிற்பங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று குறித்த காலத்தில் சிறப்பாக வேலை செய்து புகழும் பணமும் பெறுவார்கள்.
அரசியல்வாதிகளில் கடந்த காலத்தில் மந்தமாக செய்பட்டு வந்தவர்கள் எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். நாத்திக எண்ணத்துடன் செயல்பட்டவர்கள் கூட தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருக்கத் தொடங்குவார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வகையில் செயல்படுவர். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்றுவர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் பெறுவர். நண்பர்களுடன் சுற்றுலாக்களில் பங்கு பெறுவர். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்வது அவசியம். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம். வாகனப் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட நல்வழி பிறக்கும்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:
கார்த்திகை: தடைக்கல்லும் படிக்கல்லாகும்

நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் ஆற்றலும் வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும். தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர்வு பெறுவீர்கள்.
இந்த வருடம் உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழுமையாக இருக்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். அரசுத்துறைகளின் ஆதரவும் தேவையான காலங்களில் சரியாகக் கிடைக்கும். உங்கள் வீட்டில் ஆன்மிகப் பணிபுரியும் அன்பர்களும் தெய்வீகத் தன்மை பொருந்திய சாதுக்களும் அவ்வப்போது வந்து செல்ல வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடுகளும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய நேர்த்திகடன்களும் சிறப்பாக நிறைவேறும்.
குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். அதன் பயனாக குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சுபவிஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள்.
அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் கடந்த காலத்தில் இருந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். செயல்பாடுகளில் தனித்த திறமையும், நண்பர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மிகுந்த வெற்றி தரும்.
தங்கம், வெள்ளி, வைர நகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிலதிபர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் போன்ற உலோகம் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் உயர்வு பெறுவார்கள். சினிமா அரங்குகள், நாடக மேடைகள், திருமண மாளிகைகள் நடத்துவோர், மளிகைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.
அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து குழந்தை பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறை வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து சொத்துக்கள். வீட்டு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுவதில் அக்கறையுடன் செயல்படுவர்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத் தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான சவுகரியங்களைப் பெறுவதிலும் முனைப்பு காட்டுவர். தொண்டர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் முன்னின்று செயல்படுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றி தரப்படும். கோயில் சார்ந்த திருப்பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்பட்டு எதிரித்தனம் செய்வர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு நிம்மதிக்கான வழிமுறையாக இருக்கும். அரசியல்ரீதியாக முக்கிய பொறுப்பு வகிப்போருக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும்.
பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் போற்றி நடந்து அவர்களின் ஆசியுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் துறை மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித் தருவர். வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறுவோர் தகுந்த சமயத்தில் சமயோஜிதமாக நடந்து சீனியர் வக்கீல்களிடம் நற்பெயர் காண்பர். சக நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement