Load Image
Advertisement

சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. காத்திருக்கு பதவி உயர்வு

மகம்: காத்திருக்கு பதவி உயர்வு

நிதானமுடன் செயல்பட்டால் நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வு நடத்த விரும்பும் மகம் நட்சத்திர அன்பர்களே! இந்த வருடம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்டுவது நல்லது. வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான நல்ல முடிவுகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மனைவி வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். குடும்ப ஒற்றுமையில் பிள்ளைகளின் ஒத்துழைப்பால் இணக்கமான சூழல் உருவாகும். தந்தையின் ஆதரவுடன் புதிய தொழில்கள் துவங்கி செயல்படுவீர்கள். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
பணியாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதிகாரிகளுக்கு உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தம் இனி இருக்காது. தகவல் தொழில் நுட்பம் துறைகளில் பணிபுரிபவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலையில் இருந்து கொண்டே உபதொழில் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். வாகனங்களை சரியான முறையில் பராமரிப்பு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் மராமத்து செலவு அடிக்கடி உண்டாகும்.
தொழிலதிபர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் மாறி மனதில் நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை பாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் முன்னேற்றம் உண்டாகும். கலைபொருட்கள், அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி செய்வோர் அமோக லாபம் பெறுவர். சிலர் சமூக சேவையில் ஈடுபட்டு புண்ணியத்தை தேடிக் கொள்வர். சிலருக்கு சமூக அந்தஸ்தும் புகழும் உண்டாகும். கவுரவமான பதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் புரிவோர் முதலீட்டை அதிகப்படுத்தி வளர்ச்சி காண்பர். தொழிலில் நவீன தொழில் நுட்ப முறைகளை கையாண்டு வெற்றியடைவீர்கள்.


பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கடவுள் அருளால் அழகும், அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கண்டு மனம் நெகிழ்வர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் இழந்த அல்லது பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவர். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாயப்பு குறித்த அக்கறை செலுத்த வேண்டி வரும்.
அரசியல்வாதிகள், சமூக சேவர்கள், பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். புதிய முடிவுகளை அவசரப்படாமல் நிதானமாக எடுப்பது நல்லது. சமுதாயப் பணிகளை முன்னின்று நடத்தி தொண்டர்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் மூலம் பரிசும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உங்களின் எண்ணமும், எதிர்பார்ப்பும் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
கலைத்துறையினர், ஒப்பனையாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் இயற்றும் கவிஞர்கள், நடனம், சண்டைப்பயிற்சி, சாகசம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்கள் விலகி பொருளாதார வளர்ச்சியடைவர். சக கலைஞர்களின் ஆதரவால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த வீண்பயம், மனக்கவலைகளை புறந்தள்ளி உங்கள் கடமைகளை சரியாகச் செய்வது நல்லது. நீங்கள் முயற்சியுடன் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். பொன்னான நல்ல காலமாக இது அமையும்.
பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தி அக்கறையுடன் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்களும் படிப்பு மற்றும் குடும்ப ரீதியாகவும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக அக்கறையும், ஆர்வமும் உண்டாகும். நண்பர்கள் அனைவரும் நட்பு எண்ணத்துடன் பழகுவர். தந்தை மகன் உறவுமுறைகள் சீராக இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் வாழ்வுக்குத் தேவையான அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்பு மாலை சாற்றி வழிபட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
பூரம்: வளர்ச்சிக்கான காலகட்டம்

வாக்குறுதி என்பது சத்தியத்திற்கு மேலானது என்பதை உணர்ந்து உங்கள் உண்மையான வார்த்தைகளால் இரும்புக் கதவையும் திறக்கும் திறமையும், மென்மையான அணுகுமுறையும் கொண்ட பூரம் நட்சத்திர அன்பர்களே,
இந்த வருடம் வீட்டு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரயமான நிலை அடியோடு அழியும். கடந்த காலங்களில் துன்புறுத்திய நோய்கள் மறையும். சிகிக்சைக்கோ, பணச்செலவுக்கோ கிரகநிலை இடம் தராது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உங்களின் பணத் தேவைகளுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களிடம் உதவிகள் எதிர்பார்க்க இயலாது. தொழிலில் நல்ல வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதிய கிளை துவங்குதல் மற்றும் விஸ்தரிப்பு பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

பணியாளர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடந்த கால உழைப்பின் பலன் இப்போது கிடைக்கும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். கருத்து வேறுபாட்டின் காரணமாக உரசல் போக்கை கடைபிடிப்பர். உங்களின் அமைதியான குணத்தால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மனதில் இருந்த ஒருவித பயம் நீங்கி தெளிவாகக் காரியமாற்றுவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு வளர்ச்சி தரும் காலகட்டமாக அமையும். அடுக்குமாடி கட்டடம், வீட்டு மனை விற்பவர்கள், ஆடம்பர பொருள் உற்பத்தியாளர்கள், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவர். எப்போதும் கையில் பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமூகமாக நடைபெறும். கூட்டாளிகள் உங்களிடம் நட்புணர்வுடன் பழகுவார்கள். வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். நவீன உத்திகளைக் கையாள முற்படுவீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை சென்றடையும். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள்.

கலைத்துறையினர் துறையினர் புதிய நுணுக்கங்களை புகுத்தி வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வர். அவற்றை தக்க சமயத்தில் உபயோகித்து வெற்றிக்கு ஏதுவான சூழலை உருவாக்குவர். இதனால் ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளும், கவுரவமும் கிடைக்கும். உழைப்பின் உயர்வால் புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்து கொண்டிருக்கும். தொழில் விஷயமாக அவ்வப்போது வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயரதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை உடனுக்குடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் செய்யும் பெண்கள் தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் திருப்தியளிக்கும் விதத்தில் நிறைவான பணம் புழங்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையில் செயல்படுவீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். மறைமுக போட்டிகளை சமாளித்து தக்க பதிலடி கொடுப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எபோதுமே இழக்கக் கூடாது. சகோதரர்கள் வகையில் பகை வரலாம். ஆகவே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம்.
மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயியப் பின்னணி கொண்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி பின்பற்றுவது எதிர்கால நலனுக்கு அவசியம். தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற காலமிது.
பரிகாரம்: தாயாருக்கு தாமரை மலர் சாற்றி வழிபட கவலைகள் குறையும்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:
உத்திரம்: பிரிந்தவர் மீண்டும் சேருவர்

பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டும் வல்லவர்களான நீங்கள் கலகலப்பாகவே பழகினாலும் காரியத்தில் கறாராக இருப்பீர்கள். தாமரை இலை தண்ணீர் போல் தத்தளித்து நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி பெற இறுதிவரை போராடும் உத்திரம் நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடம் சொல்லால் மகத்துவமும், செயலால் புகழும் ஏற்படும். வீடு, மனை, வாகனம் வகையில் மராமத்து பணிகள் செய்யும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். சிரமம் ஏற்படுகிற நேரத்தில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதாலும் மந்திர ஸ்லேகங்களை உச்சரிப்பதாலும் தகுந்த நன்மைகளைப் பெறலாம். தந்தைவழி சார்ந்த பங்காளிகளால் உங்களுக்கு தேவையற்ற நிர்ப்பந்தங்கள் உருவாக வாய்ப்புண்டு. கவனமுடன் செயல்பட்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். திருமண வயதினருக்கு சுபவிஷய முயற்சிகள் அனுகூல பலனைத் தரும். வாழ்வில் அனுபவிக்க விரும்பும் சொகுசு மற்றும் ஆடம்பரத் தேவைகள் இக்காலத்தில் கைகூடும். தொழிலிலும் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சேமித்து வைக்க நல்வழிகள் பிறக்கும். வெளியூர், வெளிநாட்டு பிரயாணங்கள் மேற்கொள்பவர்கள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். பிரிந்து போன சொந்த பந்தம் தேடி வந்து மீண்டும் சேருவர்.
பணியாளர்கள் பதவி உயர்வு, பணி இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்வது நல்லது. இல்லாவிட்டால் வீணான பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் தவிர்க்க முடியாது. நீங்கள் செய்யும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்களை உடனுக்குடன் முடிப்பது நல்லது. முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம்.

வியாபாரிகளுக்கு சிறப்பான வளர்ச்சியும், நன்மையும் உண்டாகும். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தொலைதுார தேச பயணம் மேற்கொள்ள வேண்டிவரலாம். நிலுவைத் தொகை, பாக்கியை வசூல் செய்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பது அவசியம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்ற தருணம் இது.

பெண்களுக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை தேவை. கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் கணவருடன் சேரும் காலம் வந்து விட்டது. கணவருக்கு உங்களாலும், உங்களால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் பெண்களுக்கு விரும்பிய பணிமாற்றமோ அல்லது விரும்பிய இடமாற்றமோ கிடைக்கும்.

அரசியவாதிகளுக்கு தொண்டர்களில் மத்தியில் மதிப்பு உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்தினால் மட்டுமே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வரும்போது தகுந்த ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பது நல்லது.

பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயரும் புகழும் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காண்பர். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு செந்தாமரை மலர் கொடுத்து பூஜை செய்ய வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 6, 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement