Load Image
Advertisement

கன்னி : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. தொட்டதெல்லாம் துலங்கும்

உத்திரம்: பிரிந்தவர் மீண்டும் சேருவர்

பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டும் வல்லவர்களான நீங்கள் கலகலப்பாகவே பழகினாலும் காரியத்தில் கறாராக இருப்பீர்கள். தாமரை இலை தண்ணீர் போல் தத்தளித்து நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி பெற இறுதிவரை போராடும் உத்திரம் நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடம் சொல்லால் மகத்துவமும், செயலால் புகழும் ஏற்படும். வீடு, மனை, வாகனம் வகையில் மராமத்து பணிகள் செய்யும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். சிரமம் ஏற்படுகிற நேரத்தில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதாலும் மந்திர ஸ்லேகங்களை உச்சரிப்பதாலும் தகுந்த நன்மைகளைப் பெறலாம். தந்தைவழி சார்ந்த பங்காளிகளால் உங்களுக்கு தேவையற்ற நிர்ப்பந்தங்கள் உருவாக வாய்ப்புண்டு. கவனமுடன் செயல்பட்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். திருமண வயதினருக்கு சுபவிஷய முயற்சிகள் அனுகூல பலனைத் தரும். வாழ்வில் அனுபவிக்க விரும்பும் சொகுசு மற்றும் ஆடம்பரத் தேவைகள் இக்காலத்தில் கைகூடும். தொழிலிலும் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சேமித்து வைக்க நல்வழிகள் பிறக்கும். வெளியூர், வெளிநாட்டு பிரயாணங்கள் மேற்கொள்பவர்கள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். பிரிந்து போன சொந்த பந்தம் தேடி வந்து மீண்டும் சேருவர்.
பணியாளர்கள் பதவி உயர்வு, பணி இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்வது நல்லது. இல்லாவிட்டால் வீணான பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் தவிர்க்க முடியாது. நீங்கள் செய்யும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்களை உடனுக்குடன் முடிப்பது நல்லது. முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம்.


வியாபாரிகளுக்கு சிறப்பான வளர்ச்சியும், நன்மையும் உண்டாகும். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தொலைதுார தேச பயணம் மேற்கொள்ள வேண்டிவரலாம். நிலுவைத் தொகை, பாக்கியை வசூல் செய்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பது அவசியம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்ற தருணம் இது.

பெண்களுக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை தேவை. கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் கணவருடன் சேரும் காலம் வந்து விட்டது. கணவருக்கு உங்களாலும், உங்களால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் பெண்களுக்கு விரும்பிய பணிமாற்றமோ அல்லது விரும்பிய இடமாற்றமோ கிடைக்கும்.

அரசியவாதிகளுக்கு தொண்டர்களில் மத்தியில் மதிப்பு உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்தினால் மட்டுமே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வரும்போது தகுந்த ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பது நல்லது.

பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயரும் புகழும் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காண்பர். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு செந்தாமரை மலர் கொடுத்து பூஜை செய்ய வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 6, 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா
அஸ்தம்: போட்டியில் வெற்றி

தெளிவான சிந்தனையும், நேர்மையான அணுகுமுறையும் கொண்ட அஸ்தம் நட்சத்திர அன்பர்களே, உங்களுக்கு வாக்குவன்மை அதிகம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். மனதில் துணிவும், உற்சாகமும் பிறக்கும். நல்லவர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.
இந்த வருடம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் ஒவ்வொன்றாக விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பூர்வீகச் சொத்துகளில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளில் முடிவு சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பம் உருவாகும். குறைந்த உழைப்பிலும் நிறைந்த ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை அடிக்கடி இருக்கும். வீண் செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களின் ஆலோசனை கேட்டு நடப்பர். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். அலைச்சல் தரும் அனாவசியப் பயணங்களை தவிர்ப்பது உடல்நலனுக்கு உகந்தது.
தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டமாகும்.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்திருந்த பணியிட மாற்றம் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருக்க வாய்ப்பில்லை. சிலர் அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். ஆனாலும் உங்கள் பணிகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். சக ஊழியர்களை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.
பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். ஆடம்பர வகையில் செலவழிப்பர். கடந்த கால முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பீர்கள். அதே சமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் நிதானத்துடன் நடப்பது நல்லது. ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். நவீன பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீண் வாக்குவாதத்தை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாதுர்யமான பேச்சின் மூலம் வருமானத்தை பெருக்குவீர்கள். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
அரசியல் துறையினருக்கு தலைமையின் ஆதரவால் நன்மையும், உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற செலவு, வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தடைகள் விலகும். சக மாணவர்களிடம் கருத்து ஒற்றுமை உண்டாகும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் படிப்புடன் விளையாட்டு, கலை போட்டிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
பரிகாரம்: வெள்ளி அல்லி மலரால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய துன்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் தும் துர்கையை நமஹ
சித்திரை: தொட்டதெல்லாம் துலங்கும்

தீர்க்க சிந்தனையும் தெளிவான வாக்கும் உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு கூடும். செயலில் திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழல் உருவாகும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்று மகிழ்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் தேவையான உதவிகளைச் செய்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்த பிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.

குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அவ்வப்போது உங்களின் முன்கோபத்தால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும்.

தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய எண்ணம் மேலோங்கும். விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிதியுதவி தாராளமாகக் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆதரவும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமான தொழில்கள் சூடு பிடிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வளர்ச்சிப்பாதையில் விரைந்து பயணிப்பீர்கள். உங்களின் ஆர்வமும், திட்டமிடுதலும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்க வழிவகுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நவீன உத்திகளை கையாள்வீர்கள். வருமான உயர்வால் பழைய கடன்கள் அடைபடும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசு வகையில் சில பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும். வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த செயல்கள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ப புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம்.
கலைத்துறையினருக்கு சீரான முன்னேற்றம் உண்டாகும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடினாலும் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மக்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் கூடும். எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்கள் வகையில் பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். படிப்புடன் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: செவ்வரளி மலர்களால் முருகனை அர்ச்சிக்க பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 8, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement