Load Image
Advertisement

தனுசு : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. வீடும் காரும் ரெடி

மூலம்: வீடும் காரும் ரெடி

நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் மூலம் நட்சத்திர அன்பர்களே! இந்த வருடம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் திறமை அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களில் இருந்த மந்த நிலை மாறும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை அடிக்கடி இருக்கும். அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் அன்பாக பேசுவது நல்லது. குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை கல்வி, வேலைவாய்ப்பு விஷயமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்களுடன் பாசத்தோடு பழகுவர். மனதை உற்சாகப்படுத்திக் கொண்டு பொது, சமுதாயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரமான வீடு, சொகுசு கார் என வசதி வாய்ப்பான வாழ்க்கை அமையும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் சிறப்பாக இருக்கும்.
பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் பணி நிமித்தமாக வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்டபடி அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பர். தோழியர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். புகுந்த வீட்டினர் மத்தியில் திறம்பட செயல்பட்டு தாய்வீட்டு பெருமையை நிலைநாட்டுவீர்கள். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திருத்தலா யாத்திரை சென்று வர வாய்ப்புண்டு.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம் கவனம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சிலர் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். பழைய கடன் பிரச்னை முற்றிலுமாக தீரும். பணிவிஷயமாக சிலர் நீண்ட துார பயணம் மேற்கொள்வர். அதன் மூலம் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் மறைமுகப் போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். தலைமையின் ஆதரவால் பொறுப்பான பதவி கிடைக்கும். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். தொண்டர்களுக்காக அதிகமான அளவில் செலவு செய்ய நேரிடும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.
மாணவர்களுக்கு படிப்பில் திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வீர்கள். வருங்கால கல்விக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரமிடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகரை 21 முறை வலம் வந்து வணங்க துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
பூராடம்: அதிர்ஷ்டவசமாக வருமானம்

நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய பூராடம் நட்சத்திர அன்பர்களே! நீங்கள் எடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரவு படிப்படியாக கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் குறையும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். புதிய முயற்சிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். காரியங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். கொடுக்கல், வாங்கல் பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை. வெளியூர் பயணத்தை தவிர்க்க முடியாது.

பணியாளர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத பணி, இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். அதற்கேற்ற பணபலன் கிடைக்காமல் போகாது. மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு புதிய நுட்பங்களை கற்று முன்னேறுவீர்கள்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத விஷயங்களில் தீர்வு கிடைக்கும். உறவினர்களுடன் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணத்தின் போதும் விழிப்புடன் செயல்படவும். அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. வீண்வாக்குவாதம், சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் நன்மை கிடைக்கும். எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவர். புகுந்த வீட்டில் எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். கணவர், குழந்தைகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழியர்களுடன் பொழுதுபோக்குகளில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பிறந்த வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சக கலைஞர்களுடன் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய செயல்களில் தாமதம் ஏற்படலாம்.

அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். தொண்டர்கள் எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை உடனுக்குடன் செய்து முடிக்க ஆர்வம் காட்டுவீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். இந்த ஆண்டு கல்வியில் தரத்தேர்ச்சி காண்பீர்கள். சக மாணவர்களின் மத்தியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பணவிஷயத்தில் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக நட்பு கொள்ள வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நன்மையளிக்கும்.
பரிகாரம்: மஹாலட்சுமி தாயாருக்கு மல்லிகை மலர் கொடுத்து பூஜை செய்ய நினைத்தது நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 8
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:
உத்திராடம்: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த சூழ்நிலையிலும் நேர்மையுடன் இயங்கும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஆர்வமுடன் ஏற்று நடத்துவீர்கள். கிரகங்கள் சாதகமாக நல்ல காலமாக இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பயம் மறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த விஷயங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுக்காக சாதுர்யமாக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவு அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் நன்மையான பலன் கிடைக்கும். சமுதாயத்தொண்டு, பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். புதியவர்களை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்க வேண்டாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்த நிர்வாகப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும். நிலுவைத்தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக கடந்த காலத்தில் திட்டமிட்ட அல்லது பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் நன்மை காண்பீர்கள். மறைமுகப் போட்டிகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். விற்பனை பிரதிநிதிகளின் ஒத்துழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள். புதிய முதலீடு, விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள சாதகமான காலகட்டமாக இருக்கும்.

பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்று பணி உயர்வு, சம்பள உயர்வு காண்பீர்கள். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். பணிரீதியாக அடிக்கடி தொலைதுாரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சக பணியாளர்களின் ஓத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். வீட்டில் நிம்மதியும் அமைதியும் நிலைக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும், சலுகைகளையும் பெறுவீர்கள். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
பெண்களுக்கு கருத்து வேற்றுமை நீங்கி கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவர். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

அரசியல்துறையினர் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். செயல் திறமை கூடும். திடீர் பயணங்களும் செல்ல நேரிடலாம். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் அன்பும், ஆதரவும் பெருகும்.

மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும். சென்ற ஆண்டு பாதியில் நிறுத்திய கலை, விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: நவகிரக சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்யம் செய்து வழிபட பிரச்னைகள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 3, 4, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement