Load Image
Advertisement

மகரம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. நல்ல காலம் பொறந்தாச்சு

உத்திராடம்: நல்ல காலம் பொறந்தாச்சு

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த சூழ்நிலையிலும் நேர்மையுடன் இயங்கும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஆர்வமுடன் ஏற்று நடத்துவீர்கள். கிரகங்கள் சாதகமாக நல்ல காலமாக இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பயம் மறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த விஷயங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுக்காக சாதுர்யமாக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவு அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் நன்மையான பலன் கிடைக்கும். சமுதாயத்தொண்டு, பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். புதியவர்களை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்க வேண்டாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்த நிர்வாகப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும். நிலுவைத்தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக கடந்த காலத்தில் திட்டமிட்ட அல்லது பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் நன்மை காண்பீர்கள். மறைமுகப் போட்டிகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். விற்பனை பிரதிநிதிகளின் ஒத்துழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள். புதிய முதலீடு, விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள சாதகமான காலகட்டமாக இருக்கும்.

பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்று பணி உயர்வு, சம்பள உயர்வு காண்பீர்கள். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். பணிரீதியாக அடிக்கடி தொலைதுாரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சக பணியாளர்களின் ஓத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். வீட்டில் நிம்மதியும் அமைதியும் நிலைக்கும். குடும்பத்தினர் மத்தியில் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும், சலுகைகளையும் பெறுவீர்கள். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
பெண்களுக்கு கருத்து வேற்றுமை நீங்கி கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவர். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

அரசியல்துறையினர் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். செயல் திறமை கூடும். திடீர் பயணங்களும் செல்ல நேரிடலாம். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் அன்பும், ஆதரவும் பெருகும்.

மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும். சென்ற ஆண்டு பாதியில் நிறுத்திய கலை, விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: நவகிரக சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்யம் செய்து வழிபட பிரச்னைகள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 3, 4, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா
திருவோணம்: உழைப்பால் உயர்வீர்கள்

சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய திருவோண நட்சத்திர அன்பர்களே,
இந்த வருடம் புதிதாக வீடு மனை வாங்கவும், இருப்பவற்றை சீர்திருத்தம் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும். புத்திரர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு பிரச்னைகளில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்கும் வரக்கூடிய கருத்து வேறுபாடுகளை களைவதில் புத்திரர்கள் பாலமாகச் செயல்படுவார்கள். எதிரிகள் மூலமாக ஏற்பட்ட போட்டி, பொறாமை அகலும். உழைப்பால் வாழ்வில் உயர்வீர்கள்.

பணவரவு எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாக வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும். நிலுவை பாக்கிகள் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.

குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். மாமன், மைத்துனர் வழியில் நெருக்கம் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். சரியான நேரத்தில் உணவு, ஓய்வெடுத்துக் கொள்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் தெளிவான போக்கு தென்படும் காலகட்டமாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது நிதானம் தேவை. சக வியாபாரிகளால் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளின் ஆலோசனைகளை ஏற்று பின்பற்றுவது நல்லது.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பணிச்சுமை ஏற்பட்ட போதிலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வர்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். குடும்பத் தேவைக்கான பணவரவும் சீராக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் ஆதரவும், அவர்களின் வளர்ச்சியும் கண்டு மனம் களிப்பீர்கள். ஆனால் அவர்களால் ஏற்படும் வீண்செலவை தவிர்க்க முடியாது.

கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். சிலர் சொகுசு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் தொழில்ரீதியாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் பிரச்னைகளில் ஓரளவு குறையும்.

அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொண்டர்கள் வகையில் எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். திட்டமிட்டு படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டு. கலை, விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.
பரிகாரம்: அம்மனை வணங்க குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 6, 8
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் தும் துர்கையை நமஹ
அவிட்டம்: வருமானத்திற்கு குறைவில்லை

எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காணும் அவிட்டம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள். குடும்பத்தினரால் வீண் செலவுகள் உண்டாகலாம். பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமத போக்கு காணப்படும். தொடர்பற்ற மனிதர்களால் தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கனவுத்தொல்லையால் அவதிப்பட வாய்ப்புண்டு. வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். ஆனால் உடல்நலனை எண்ணி யாரும் வருந்த தேவையில்லை. ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றி பெறும் காலகட்டம் இது.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே நிதானமுடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லைகள் நீங்கும். உங்கள் பேச்சில் தற்பெருமை தலைதுாக்கும். பயணங்களின் போது பொருட்களை விழிப்புடன் பாதுகாக்கவும். சுபவிஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படலாம்.
தொழில் வியாபார வளர்ச்சி மந்தமாக காணப்பட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. எதிரிகளால் அவ்வப்போது இடையூறுகள் தோன்றினாலும் அதை சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். கால தாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடையும். சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும்.
பணியாளர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலிடத்துடன் இருந்து வந்த மனகசப்புகள் நீங்கும். பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.

பெண்கள் எதிர்த்துப் பேசாமல் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் கணவருடன் ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பப் பிரச்னைகள் உண்டாகும் போது பொறுமையுடன் பேசி தீர்ப்பீர்கள். தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்ட முயல்வீர்கள். புகுந்த வீட்டினரின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தோழியரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணத்தின் போதும், வெளியூர் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சிக்காக அயராமல் பாடுபடுவர். வீண் செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நல்லது. மேலிடத்தின் ஆதரவால் சிலர் பொறுப்பான பதவிகளைப் பெறுவர். அதன் மூலம் மனமகிழும் சூழ்நிலை உருவாகும்.
மாணவர்களுக்கு நல்ல காலகட்டமாக அமையும். பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், சகமாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். வீண் பொழுது போக்குளில் ஈடுபட வேண்டாம். பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
பரிகாரம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வழிபட துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 6, 7, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement