Load Image
Advertisement

கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு பலன்.. சேமிப்பு பன்மடங்கு கூடும்

அவிட்டம்:
எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காணும் அவிட்டம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள். குடும்பத்தினரால் வீண் செலவுகள் உண்டாகலாம். பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமத போக்கு காணப்படும். தொடர்பற்ற மனிதர்களால் தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கனவுத்தொல்லையால் அவதிப்பட வாய்ப்புண்டு. வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். ஆனால் உடல்நலனை எண்ணி யாரும் வருந்த தேவையில்லை. ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றி பெறும் காலகட்டம் இது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே நிதானமுடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லைகள் நீங்கும். உங்கள் பேச்சில் தற்பெருமை தலைதுாக்கும். பயணங்களின் போது பொருட்களை விழிப்புடன் பாதுகாக்கவும். சுபவிஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படலாம்.
தொழில் வியாபார வளர்ச்சி மந்தமாக காணப்பட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. எதிரிகளால் அவ்வப்போது இடையூறுகள் தோன்றினாலும் அதை சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். கால தாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடையும். சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும்.
பணியாளர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலிடத்துடன் இருந்து வந்த மனகசப்புகள் நீங்கும். பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.

பெண்கள் எதிர்த்துப் பேசாமல் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் கணவருடன் ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பப் பிரச்னைகள் உண்டாகும் போது பொறுமையுடன் பேசி தீர்ப்பீர்கள். தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்ட முயல்வீர்கள். புகுந்த வீட்டினரின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தோழியரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணத்தின் போதும், வெளியூர் செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சிக்காக அயராமல் பாடுபடுவர். வீண் செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நல்லது. மேலிடத்தின் ஆதரவால் சிலர் பொறுப்பான பதவிகளைப் பெறுவர். அதன் மூலம் மனமகிழும் சூழ்நிலை உருவாகும்.
மாணவர்களுக்கு நல்ல காலகட்டமாக அமையும். பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், சகமாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். வீண் பொழுது போக்குளில் ஈடுபட வேண்டாம். பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
பரிகாரம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வழிபட துன்பங்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: 6, 7, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் செளம் சரவணபவ; ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ
சதயம்: குடும்பத்தில் குதுாகலம்

அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் சதயம் நட்சத்திர அன்பர்களே! சமூக சிந்தனை அதிகம் கொண்ட உங்களுக்கு
இந்த வருடம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதுாரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் அவ்வப்போது சிறுசிறு தடைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்களிடம் இருந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் பன்மடங்கு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான விரிவாக்க முயற்சிகள் வெற்றி பெறும். வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் வளர்ச்சி பெறுவீர்கள். வியாபார ரீதியான பயணங்களால் திடீர் ஆதாயம் காண்பீர்கள். மறைமுகப் போட்டிகளால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பழைய எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய நிலுவைக் கடன்கள் வசூலாகும். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இட, பணி மாற்றங்களும் கிடைக்கும். ஒதுக்கிய பணிகளை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணியிடத்தில் கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களின் விருப்பம் அறிந்து கணவர் நிறைவேற்றுவார். வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வர வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி நிலைக்கும்.

கலைத்துறையினர் வீண் விவகாரத்தில் சிக்க வாய்ப்புண்டு. சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மையை அடைவீர்கள். செயல்கள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். தொலை துார பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். சமுதாயத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களின் செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். ஞாபக மறதி, உடல்சோர்வுக்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது. சுற்றுலா செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: அம்மனுக்கு ராகு கால பூஜையில் கலந்து கொள்ள வாழ்க்கை சிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவபு
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா
பூரட்டாதி: சேமிப்பு பன்மடங்கு கூடும்

எல்லோரையும் பற்றிய விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் துாய்மையாக இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.
இந்த வருடம் சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சிறப்பாகவே தொடரும். சேமிப்பு பன்மடங்கு கூடும்

தொழில், வியாபாரத்தில் மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். தொழில்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். இருப்பினும் வியாபார தலத்தில் உங்களின் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் கவனம் இருப்பது நல்லது. இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம்.

பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வை எளிதாகப் பெற்று மகிழ்வார்கள். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். பணியிடத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருமானத்தின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். மனஉறுதியுடன் குறிக்கோளை நோக்கி பயணிப்பது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்த தம்பதியர் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த கன்னியருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகளால் மனநிறைவு காண்பீர்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள், நடனம், இசை போன்ற பிற துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகளைப் பெற்று மனம் மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.
பரிகாரம்: நவகிரக குருவை வணங்க வாழ்க்கை நிலை உயரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement