Load Image
Advertisement

மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்.. எதிர்பாராத அதிர்ஷ்டம்

அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவு
குருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் – கேது அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு காரியங்களை செய்பவர்கள். இந்த குருபெயர்ச்சியில் கொடுத்த வாக்கை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான மராமத்துச் செலவுகள் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை மூலதனமாக்கி தொழில் செய்பவர்களுக்கு அதற்கேற்ப லாபம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. முதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியிலுள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப்பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம்.
கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் உன்னத நிலையை அடையும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நல்லபடியாக நடக்கும். நீண்டநாள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரயம் ஆகலாம். காரிய அனுகூலம் உண்டாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்
பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.
மாணவர்கள் ஆர்வமுடன் படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். நண்பர்களின் மீது விரக்தி எண்ணம் ஏற்படலாம். எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்பு விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

பரணி: எதிர்பாராத அதிர்ஷ்டம்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஏழாவது நடசத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
இந்த குருபெயர்ச்சியில் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வெற்றிகள் பல காண்பீர்கள். நினைத்ததை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும். முக்கிய பிரமுகர்கள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். வங்கியில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோரால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல், இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் பெறும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு திருப்தியளிக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் முன்னேற்றத்திற்கும், சுபநிகழ்ச்சிக்கும் குறைவிருக்காது. எந்த பிரச்னை, தடைகளையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில நிகழ்வுகளால் வருத்தத்திற்கு ஆளாகலாம்.
கலைத்துறையினருக்கு இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மை நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நண்பர்கள், உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம் கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் கவுரவம் உயரும்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல காலமாக இது அமையும். அதிகச் செலவுகள் ஏற்பட்டாலும் தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். தலைமையின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். அரசியல் ஆதாயத்தோடு தொழிலிலும் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடக்கும். மக்கள் பணியில் உங்களாலான முயற்சிகளைச் செய்வதில் முனைப்புடன் இருப்பீர்கள்.
பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். குடும்ப பிரச்னைகளை முறியடிக்கும் வல்லமை வந்து சேரும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர், பிள்ளைகளின் வகையில் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளைத் தக்க சமயத்தில் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பாடங்களை ஆர்வமுடன் படிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும். மற்றவர் மத்தியில் பாராட்டு காண்பீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க வருமானத்தில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
கார்த்திகை: போட்டியில் வெற்றி

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சூரியனுடைய அம்சத்தில் பிறந்த நீங்கள் தந்தையாரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பீர்கள்.
இந்த குருபெயர்ச்சியில் தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். மனதில் திடீரென தடுமாற்றம் உண்டாகலாம். நட்சத்திராதிபதி சூரியன் சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தால் அனுகூலம் உண்டு. உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பண பரிவர்த்தனை சீராக இருந்து வரும். இடமாற்றம், பணிமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். திறமை, சாதுர்யம், பராக்கிரமம் வெளிப்படும். செயலில் உத்வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சிறப்பாக நிறைவேறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகள் கூட எளிதாக நடந்து முடியும். பணியிடத்தில் காணப்பட்ட குறைகள் ஒவ்வொன்றாக மறையும். புதியவர்களிடம் உஷாராக இருப்பது நல்லது.
குடும்பத்தினரின் பேச்சு, நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் நலனில் அக்கறை தேவைபெரியோர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலுடன் புதிய விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நிலம், வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும்.
அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும். மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு பிரச்னைகள் தலைதுாக்கலாம். கவனம் தேவை. தொண்டர்கள் வகையில் செலவும் அதிகரிக்கும்.
பெண்கள் எடுத்த காரியத்தில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவர். வீண்கவலை, தடுமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம் கவனம். பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நிம்மதிக்கு வழிவகுக்கும். வீண்பொழுது போக்குகளை குறைத்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கத்தினரின் தொல்லைகள் தானாக விலகும். கண் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்டு படிப்பது, படிப்பதை எழுதிப் பார்ப்பது வெற்றிக்கு உதவும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். பரிசு, பாராட்டுக்கு குறைவிருக்காது.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement