Load Image
Advertisement

கடகம் : குருப்பெயர்ச்சி பலன் ..பணப்புழக்கம் அதிகரிக்கும்

புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவை நட்சத்திராதிபதியாகக் கொண்ட நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த குருப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை சிறப்பாக இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள், திடீர் கோபம் ஏற்படலாம். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிருப்தியை தரும்.
பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழிலாளர்களின் விசுவாசம், ஒத்துழைப்பை பெற்று மகிழ்வீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். சிலருக்கு குறுக்குவழியில் சம்பாதிக்கும் எண்ணம் உண்டாகலாம் கவனம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் கிடைக்கும். நிர்வாகத்தினரின் கருணையால் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். சிலர் விருப்பம் இல்லாத பணிமாற்றம், இடமாற்றத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உருவானாலும் வந்த வேகத்தில் காணாமல் போகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு வீண்அலைச்சல், மன உளைச்சல் ஏற்படலாம். அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். எனினும் அதை வெளியில் சொல்லாமல் கடமையில் கவனம் செலுத்துவர். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். கவுரவத்திற்காக செலவும் செய்யும் கட்டாயம் வரலாம்.
அரசியல்வாதிகள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பணம் வந்து குவியும். கட்சி தலைமை அல்லது தொண்டர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொலை துார தகவல்கள் நல்லவையாக இருக்கும். விசுவாசிகளின் செயல்பாட்டால் மனதில் அமைதி பிறக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். டென்ஷனை குறைத்து வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது அவசியம். சிலர் சகமாணவர்களால் வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு, பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பூசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சந்திரன் - சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைத்து வாழ்வில் முன்னேறுபவர்கள்.
இந்த குருபெயர்ச்சியால் மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அடிக்கடி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. உடல் நலனில் பாதிப்பு ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். .பணவரவு மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் ஒவ்வொன்றாக மறையும். புதுவியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பணியாளர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
குடும்பத்தினரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். புதிய முயற்சிகளில் குறுக்கிட்ட முட்டுகட்டைகள், பிரச்னைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் மனதில் உதயமாகும். மாமன், மைத்துனர் வகையில் உதவி கிடைக்கும். நண்பர்களால் வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
கலைத்துறையினர் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கோபத்தைக் கைவிட்டு நிதானமாக பேசுவது பிரச்னை வராமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகள் கூடும். தொழில் ரீதியாக வெளியிடங்களில் தங்க நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு பிற கட்சிகளில் உள்ளவர்களை இகழ்ந்தும் கேலியும் பேச வேண்டாம். இல்லாவிட்டால் வீணான வழக்குகள் உங்கள் மேல் வரலாம். கவுரவத்திற்காக வீண் செலவு செய்ய நேரிடும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குக்கு குறைவிருக்காது. வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.
பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். விலகி விலகிச் சென்றாலும் உங்களை நெருங்க சிலர் முயற்சிப்பர். கணவன், மனைவி பிரச்னையில் மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டுதலை பின்பற்று நடப்பீர்கள்.
பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
ஆயில்யம்: வாகன யோகம் வந்தாச்சு

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபதாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார். சந்திரன் - புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள் எடுத்த முடிவில் மாறாத கொள்கை கொண்டவர்கள்.
இந்த குருபெயர்ச்சியில் எதிர்பார்த்த நன்மை நடக்கும். காரியத்தில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சிறப்பாக அமையும். தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உழைப்பும், அதற்கேற்ப ஓய்வும் எடுத்து வருவீர்கள். வீண் வாக்குவாதத்தால் உறவினர் வகையில் பகை உண்டாகலாம். பணவரவு சீராக இருக்கும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும். நட்சத்திராதிபதி புதன் சஞ்சாரத்தால் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர், பெரியோர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, குழப்பமோ அடைய மாட்டீர்கள்.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் தரும். எதிர்கால வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை மனதில் எழும். வங்கி, நிதிநிறுவனங்கள் மூலம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். தொழிலில் விரிவாக்கப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவால் பணிகள் தடையின்றி நடக்கும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.
பணியாளர்கள் புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் தாராளமாக இருக்கும். நீண்ட துாரப் பயணத்தால் சந்தோஷம் காண்பீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். சிலருக்கு பணிச்சுமை உண்டாகலாம். எனினும் மனோ பலத்தால் சமாளித்து வெற்றி காண்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பம் தொடர்பான பிரச்னைகளில் முடிவு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபடுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிக எணணம் மேலோங்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். ஆன்மிக பயணம், திருத்தல யாத்திரை சென்று வருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் விஷயமாக சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண்வம்பு, வழக்கு விவகாரங்கள் வரலாம். வெளியூர், வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
அரசியல்வாதிகளுக்கு வருமானம் வந்தாலும் பொறுப்பு, பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சுயநலத்தைக் கைவிட்டு பொதுநல நோக்குடன் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொண்டர்கள் மத்தியில் அல்லது தலைமையிடம் வீண்பழி ஏற்பட்டு விலகும்.
பெண்கள் அடிக்கடி பயணம் செல்வதால் சோர்வுக்கு ஆளாவர். துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினர், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சகோதர வழியில் உதவி கிடைக்கும். பிறந்தவீட்டு பெருமையை புகுந்த வீட்டில் நிலைநாட்டுவர்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். விளையாட்டு, கலைத்துறைகளில் கவனம் செலுத்துவர். திட்டமிட்டபடி செயல்களை முடித்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement