Load Image
Advertisement

ஷிர்டி பாபா பகுதி - 1

உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை... காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்!

படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.

அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! - பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.

பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை.

அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறது.... எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோ...பாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனி.....

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement