Load Image
Advertisement

ராமானுஜர் பகுதி-4

நல்லவர்கள் பார்வையில் எல்லாமே நல்லதாகத்தான் தெரியும். ராமானுஜருக்கு இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாது. வழக்கம் போல், அவர் குருகுலம் வந்து சென்று கொண்டிருந்தார். ஒருநாள் சீடர்களை யாதவப்பிரகாசர் அழைத்தார். சீடர்களே! அத்வைதத்தை அழிக்க புறப்பட்டிருக்கும் ராமானுஜனை, கொல்வதற்குரிய திட்டம் ஏதாவது வைத்துள்ளீர்களா? என்றார் ரகசியமாக. யாரும் வாய் திறக்கவில்லை. பாவம்...ஏறத்தாழ 18 வயது நிரம்பிய வாலிபர்கள் அவர்கள். அந்த அன்பு நெஞ்சங்களில் கொலை வெறி ஏற்றப்பட்டது. யாதவப்பிரகாசரே தன் திட்டத்தைக் கூறினார். குழந்தைகளே! இவ்வுலகில் பாவம் தீர்ப்பது கங்கை நதி. நாமெல்லாம் காசி யாத்திரை புறப்படுவோம். செல்லும் வழியில், ராமானுஜனைத் தீர்த்துக் கட்டி விடுவோம். அந்தணனைக் கொன்ற பாவம் கங்கையில் மூழ்கினால் சரியாகி விடும் என்கின்றன சாஸ்திரங்கள். நாமும் கங்கையில் மூழ்கி பாவத்தை தொலைத்து விட்டு திரும்பி விடுவோம். ராமானுஜனும் தொலைந்து போவான். நம் பாவமும் தொலையும், என்றார். உல்லாசப்பயண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. ராமானுஜருடன் அவரது சித்தி மகன் கோவிந்தனும் படித்து வந்தார். அவரும் ராமானுஜர் வீட்டில் தங்கியிருந்தார். இருவரும் இணைந்தே பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் இந்த உல்லாசப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டினர். காசியும், காஞ்சியும் எட்டாத தூரத்தில் இருப்பவை. மிக நீண்ட இந்தப் பயணம் பல அனுபவங்களைத் தரும் என்பதால், இவர்கள் ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை. இவ்வளவு தூரத்துக்கு தன் ஒரே மகனை அனுப்ப காந்திமதி அம்மையாருக்கு மனமில்லை. இருப்பினும், குருகுலத்தில் எல்லாக்குழந்தைகளும் செல்வதால், தன் மகனையும் அனுப்ப சம்மதித்தார். உல்லாசப்பயணம் ராமானுஜரையும், கோவிந்தனையும் பொறுத்தவரை ஆனந்தமாகவும், மற்றவர்களைப் பொறுத்தவரை திகிலுடனும் துவங்கியது. பல நாட்கள் கடந்து அவர்கள் விந்தியமலை அடிவாரத்திலுள்ள கோதண்டாரண்யம் என்ற காட்டை அடைந்தனர். அங்கே ஆள்நடமாட்டம் என்பதே இல்லை. யாதவதீர்த்தர் என்ற ஆசிரிய வடிவில் இருந்த புலி, மான் போல் அப்பாவித்தனமாக காட்சி தரும் ராமானுஜர் மீது பாயத் தயாரானது. சீடர்களை அழைத்தார். ராமானுஜனை கொல்ல இதை விட சரியான இடம் ஏதுமில்லை. சாட்சியம் எதுவும் இல்லாமல் அவனை அழித்து விடலாம், என போதித்தார். இந்தப் பூவுலகில் கொலைக்கு சாட்சியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கும் பரந்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் கண்களை விட்டு எதையும் மறைக்க இயலுமா? ராமானுஜரின் சகோதரர் கோவிந்தனின் காதில் இந்தப் பேச்சு விழுந்து விட்டது. ஆஹா...சகோதரனைக் கொல்ல சதியல்லவா நடக்கிறது? அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார். அவர் ஒரு குளத்தில் கை, கால் கழுவிக் கொண்டிருந்தார். அவரை ஆரத்தழுவிக் கொண்டார். அண்ணா! அந்த நாராயணனின் அருளால் இன்று நீங்கள் உயிர் பிழைத்தாய். உடனே இங்கிருந்து ஊருக்குத் திரும்பி விடுங்கள். நீ காசிக்கு வர வேண்டாம், என்றார் அவரது காதில் ரகசியமாக. ராமானுஜருக்கு ஏதும் புரியவில்லை. கோவிந்தா! இன்று உனக்கு என்னாயிற்று? தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் ஏதோ சொல்கிறாயே. புரியும்படி சொல்,. கோவிந்தன் நடந்த சேதிகளை ஒன்றுவிடாமல் விளக்கமாகச் சொன்னார். ராமானுஜர் அதிர்ந்து விட்டார். சிறியவர்கள் பெரியவர்களின் கருத்தை மறுத்தால், புத்திமதி சொல்லி திருத்த வேண்டும். அல்லது வாதத்தால் வெல்ல வேண்டும். இரண்டும் இல்லாமல், உயிருக்கே உலை வைக்க துணிந்து விட்டாரென்றால்.... அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. கோவிந்தனிடம் விடை பெற்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார் ராமானுஜர். நீண்ட நேரமாக ராமானுஜரைக் காணாததால், கோவிந்தன் அழுவது போல நடித்தார். அண்ணா! நீங்கள் எங்கே போய் விட்டீர்கள். இந்த அடர்ந்த காட்டில் எங்களை விட்டு பிரிந்து விளையாட்டுத்தனமாக எங்காவது போகலாமா? நான் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்? குருவே! வாருங்கள். அண்ணாவைத் தேடுவோம், என்றார் கண்களைக் கசக்கிக் கொண்டே. யாதவப்பிரகாசருக்கு மகிழ்ச்சி. ஒழிந்தான் அந்தப் பொடியன். நமக்கு இறைவன் எந்த வேலையும் வைக்கவில்லை. இந்தக் காட்டுக்குள் அதிகப்பிரசங்கித்தனமாக போயிருப்பான். காட்டு விலங்குகள் அவனை தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டிருக்கும், என்று தனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். மற்ற மாணவர்களும் இக்கருத்தை ஆமோதித்தனர். இருந்தாலும், கோவிந்தனிடம் நல்லவர்கள் போல் அவர்கள் நடித்தனர். கவலைப்படாதே கோவிந்தா! ராமானுஜன் வந்து விடுவான். அவன் ஒன்றும் குழந்தையல்ல, பதினெட்டு வயது வாலிபன். நாம் காத்திருப்போம். அவன் எவ்வளவு புத்திசாலி தெரியுமா? ஆசிரியரையே மடக்கும் அந்த புத்திசாலிக்கு, இந்த ஆரண்யமா ஒரு பெரிய விஷயம். வந்து விடுவான்...வந்து விடுவான், என்று ஆறுதல் சொன்னார்கள். மாலை வரை காத்திருந்தும் அவர் வராமல் போகவே, யாதவதீர்த்தர் அனைவரிடமும், சரி...இனி அவனுக்காக காத்திருந்து பயனில்லை. அவன் எப்படியும் நம்மைத் தேடிப்பிடித்து வந்து விடுவான். எல்லாரோடும் சேர்ந்து வராமல், என் அனுமதி பெறாமல் காட்டுக்குள் சென்றது அவனது தவறு தானே தவிர நம்முடையதல்ல, என்றவர் யாத்திரையை தொடர உத்தரவிட்டார். கோவிந்தனும் அவர்களுடன் வேறு வழியின்றி புறப்படுவது போல அழுவதுபோல் பாவனை செய்து கொண்டே சென்றார். மற்றவர்கள் அவரை சமாதானம் செய்வது போல் நடித்துக் கொண்டே சென்றனர். இவர்களிடமிருந்து தப்பிய ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்ட போது மாலை வேளையாகி விட்டது. சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் அஸ்தமிக்கும் நிலை. சற்று கூட திரும்பிப்பார்க்காமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்தார். கும்மிருட்டாகி விட்டது. பசி வாட்டியது. கால்கள் தள்ளாடி விட்டன. மயக்கம் வருவது போல் இருந்தது. ஒரு மரத்தடியில் அப்படியே சாய்ந்தார். தூங்கி விட்டார். மறுநாள் மதியத்திற்கு பிறகு தான் எழவே முடிந்தது. அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார். அப்போது கடா மீசையுடன் ஒரு உருவம் அவர் அருகே வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement