Load Image
Advertisement

ராமானுஜர் பகுதி-6

ராமானுஜர் தாயிடம் பொறுமையாக எல்லாவற்றையும் சொன்னார். அதைக்கேட்டு தாய் பதறிப் போனார். ராமானுஜா! என் செல்லமே! இத்தகைய சூழ்நிலையிலும் எம்பெருமான் பரந்தாமன் கைவிடவில்லையப்பா. அவனுடைய பேரருளால் நீ திரும்பி வந்தது கண்டு மகிழ்கிறேன், என்றவள் அவரை உச்சி முகந்தார். ராமானுஜர் சற்றே வெளியே போய் வருவதாகச் சொல்லி விட்டு கிளம்பினார். மகன் நீண்ட நாள் கழித்து வந்ததால், அன்று சிறப்பாக ஏதேனும் சமைக்க வேண்டும் என விரும்பினார் காந்திமதி அம்மையார். ராமானுஜரின் மனைவி ரக்ஷகாம்பாளும் பிறந்த வீட்டுக்கு போய் இருந்தார். வேலைக்காரிக்கும் விடுப்பு கொடுத்து விட்டார். இவர் பெருமாள் கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும் நைவேத்ய பழம், கிழங்கு என்று நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார். மகன் காசி சென்றதிலிருந்து வீட்டிற்கு விறகு கூட வாங்கவில்லை. வேலைக்காரியை அழைத்து வர ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். இந்நேரத்தில் அவரது மருமகள் ரக்ஷகாம்பாளும், தங்கை தீப்திமதியும் வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் காந்திமதி அம்மையார். தீப்தி! என்னடி ஆச்சரியமா இருக்கு! ராமானுஜன் இப்போ தான் வந்தான். நீயும் வரே, மருமகளும் வரா, ரொம்ப சந்தோஷமா இருக்குடி, என்றவரை அவர்கள் ஆச்சரியமாய் பார்த்தனர். அக்கா! நீ என்ன சொல்றே! காசிக்கு போன ராமானுஜனும், கோவிந்தனும் ஊருக்கு திரும்ப குறைஞ்சது ஆறுமாசமாவது ஆகுமே! அதற்குள் எப்படி அவன் வந்தான்? கோவிந்தனும் வந்துட்டானா? என்றார் பதைபதைப்புடனும் ஆச்சரியத்துடனும். ரக்ஷாகாம்பாளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, கணவர் ஊர் திரும்பிய செய்திகேட்டு. நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் காந்திமதி அம்மையார் சொல்ல, அவர்கள் வெலவெலத்து போனார்கள். அக்கா! நமக்கு பெருமாள் தான் துணை. குழந்தை இந்த அளவோட தப்பிச்சானே! அந்த பெருமாளும், லட்சுமிதாயாரும் தான் அவனை வேடர் உருவம் தாங்கி, நம்மகிட்டே சேத்துட்டாங்க, என சந்தோஷப்பட்டார். ரக்ஷாகாம்பாள் தன் மாங்கல்ய பலம் குறித்து பெருமைப்பட்டார். இதற்குள் வெளியே சென்ற ராமானுஜர் வீடு திரும்ப, ரக்ஷகாம்பாள் ஓடோடிச் சென்று தன் கணவரின் பாதத்தில் வீழ்ந்து ஆசி பெற்றார். பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்த அவரை கண்ணீர் மல்கவும், அதே நேரம் பெண்மைக்கே உரிய நாணத்துடனும் நோக்கினார். ராமானுஜர் அவரைத் தேற்றினார். சித்தியிடம் ஆசிர்வாதம் பெற்றார். ஒரு வழியாக வேலைக்காரி வந்து சேர பரந்தாமனுக்கு விசேஷ பூஜை நடத்த ஏற்பாடாயிற்று. அவருக்கு நைவேத்யம் செய்ய நெய் பட்சணங்கள் தயாராயின. வீடே களை கட்டியது. பூஜை முடிந்தது. அப்போது வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. ராமானுஜர் வாசலை எட்டிப் பார்த்தார். அங்கே திருக்கச்சி நம்பி நின்று கொண்டிருந்தார். அவரை அன்புடன் வரவேற்றார் ராமானுஜர். தங்களைப் போன்ற மகாத்மா இந்நேரத்தில் என் வீட்டிற்கு எழுந்தருளியது நான் பெற்ற பேறு, என நெக்குருகி கூறினார். திருக்கச்சி நம்பிகள் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். குறைந்த கல்வியறிவே உடையவராயினும் கூட, ஜாதி வேற்றுமை பாராமல், அவரது பரம பக்திக்கு உரிய மரியாதை அளித்தார் ராமானுஜர். அவரது இல்லத்திலேயே சாப்பிடும்படி திருக்கச்சி நம்பியை வேண்ட, அனைவருமாய் அமர்ந்து உணவருந்தினர். இங்கே இப்படியிருக்க, யாதவப் பிரகாசரும், மாணவர்களும் காசியை அடைந்தனர். கோவிந்தர் எதுவுமே தெரியாதவர் போல் அவர்களிடம் நடந்து கொண்டார். ராமானுஜருக்காக வருத்தப்படுவதை மட்டும் சற்றும் குறைக்கவில்லை. எல்லாரும் கங்கையில் நீராடச் சென்றனர். கோவிந்தர் நீராடிக் கொண்டிருந்த போது, அவரது கை தண்ணீருக்குள் இருந்த ஒரு பாறையில் பட்டது போல் இருந்தது. அவர் அவ்விடத்தில் துழாவிப் பார்த்தார். அழகிய லிங்கம் ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதன் அழகு அவரைக் கவர்ந்தது. உமை மணாளா, என தன் மார்போடு அணைத்துக் கொண்டார். தனக்கு லிங்கம் கிடைத்த விபரத்தை யாதவப்பிரகாசரிடமும், சக மாணவர்களிடமும் சொன்னார். யாதவப்பிரகாசர் அவரிடம், மகனே! உன் மிதமிஞ்சிய இறை பக்தியால் இது கிடைத்துள்ளது. இதை நீ தொடர்ந்து பூஜித்து வா, என்றார். குருவின் உத்தரவுபடி, கோவிந்தர் அதை பூஜிக்கலானார். காசி யாத்திரை முடிந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். லிங்கத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு கோவிந்தர் வந்தார். காஞ்சிப் பயணத்தின் நடுவே அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தனர். அத்தலம் தான் காளஹஸ்தி. அவ்விடத்தை பார்த்தவுடனேயே, கோவிந்தர் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. குடும்பப்பற்று, உலகப்பற்று எல்லாம் அறுந்தது. அவர் யாதவப்பிரகாசரிடம் ஓடினார். குருவே! இவ்விடத்தை விட்டு நகர என் மனம் ஏனோ மறுக்கிறது. நான் காஞ்சிபுரத்துக்கு வரவில்லை. இங்கேயே நான் தங்கப் போகிறேன். பாணலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இங்கேயே என் காலத்தைக் கழிக்கப் போகிறேன். நீங்கள் என் அன்னையிடமும், பெரியம்மாவிடமும் இந்த தகவலைச் சொல்லி விடுங்கள், என்றார்.மாணவனின் உறுதியான பக்தி, அவரை மிகவும் கவர்ந்தது. அவரது கோரிக்கையை ஏற்றார். கோவிந்தரை அங்கேயே விட்டுவிட்டு மாணவர் படை காஞ்சிபுரம் வந்தடைந்தது. யாதவப்பிரகாசர் தீப்திமதியிடம் நடந்ததைச் சொன்னார். மகன் சிவ வழிபாட்டில் இறங்கியது குறித்து தீப்திமதி மகிழ்ச்சியே அடைந்தார். இருப்பினும், பெற்ற பாசத்தால் மகனை ஒருமுறை சென்று பார்த்து வர முடிவெடுத்தார். அக்காவிடம் சொல்லிவிட்டு காளஹஸ்தி புறப்பட்டார். தாயைக் கண்டு மகனுக்கு பெரும் மகிழ்ச்சி. சில நாட்கள் அங்கு தங்கி விட்டு, ஊர் திரும்பினார் தீப்திமதி. ராமானுஜன் தொலைந்தான், இனி எவ்வித தொல்லையும் இல்லாமல் பாடம் எடுக்கலாம் என யாதவப்பிரகாசர் மகிழ்வுடன் பாடங்களை ஆரம்பித்தார். அப்போது வாசலில், ஐயா, நான் உள்ளே வரலாமா? என கேட்டு வாசலில் ஒரு வாலிபன் நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement