Load Image
Advertisement

மனிதன் ஓங்காரமே!

உலகம், இறைவன் இரண்டும் ஓங்காரம் என்று முதல் மந்திரம் கூறியது. மனிதனும் ஓங்காரமே என்று கூறி இந்த ஐந்து மந்திரங்கள் விளக்கம் தருகின்றன.

ஸோஸயமாத்மா அத்யக்ஷரம் ஓங்காரோஸதிமாத்ரம் பாதா
மாத்ரா மாத்ராச்ச பாதா அகார உகாரோ மகார இதி //8//

ஸ; அயம் - இந்த; ஆத்மா - ஆன்மா; அத்யக்ஷரம் - சொல்; ஓங்கார; - ஓங்காரம்; அதிமாத்ரம் - எழுத்து; பாதா; - பகுதிகளே; மாத்ரா; - எழுத்துக்கள்; மாத்ரா; - எழுத்துக்களே; பாதா; - பகுதிகள்; அகார; - அகாரம்; உகார; - உகாரம்; மகார; - மகாரம்; இதி - இவ்வாறு.

8. இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்பிட
வேண்டுமானால் அதுவே ஓம் என்னும் ஓங்காரம்.
எழுத்துக்களாகச் சொல்ல வேண்டுமானால், அதன்
பகுதிகளே எழுத்துக்கள் எழுத்துக்களே பகுதிகள்,
அந்த ஓங்காரம் அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்
களால் ஆனது.

ஓங்கார மந்திரத்தை இரண்டு கோணங்களில் காண்கிறது இந்த உபநிஷதம் ஒன்று, முதல் மந்திரத்தில் கண்டதுபோல் சென்றவை, இருப்பவை, வருபவை என்று அனைத்தின் மொத்தமாகவும், காலங்களைக் கடந்ததாகவும் இருக்கின்ற பொருள்.

இரண்டாவது அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால் அமைந்த ஒரு சொல், அ+உ+ம் = ஓம் வாயைத் திறக்கும்போதே அ உச்சரிக்கப்பட்டு விடுகிறது; ம் என்பதுடன் வாய் மூடப்படுகிறது. அதன்பிறகு எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாது. எனவே அனைத்து வார்த்தைகளின் மொத்தமான ஒரு மந்திரமாக அமைந்துள்ளது ஓம்.

இந்த மந்திரம் எப்படி நம்மில் அதாவது நமது மூன்று பரிமாணங்களுடன் பொருந்துகிறது என்பதைக் தொடரும் மந்திரங்கள் கூறுகின்றன.

விழிப்புநிலை = வைசுவானரன் =அ:

ஜாகரிதஸ்தானோ வைச்வானரோஸகார: ப்ரதமா மாத்ரா
ஆப்தேராதிமத்வாத் வா ஆப்னோதி ஹ வை ஸர்வான் காமானாதிச்ச
பவதி ய ஏவம் வேத //9//

ஜாகரிதஸ்தான; - விழிப்புநிலையைக் களமாகக் கொண்ட; வைச்வானர; - வைசுவானரன்; அகார; - அகாரம்; ப்ரதமா மாத்ரா - முதற்பகுதி; ஆப்தே; - நிறையும்; தன்மையால்; ஆதிமத்வாத் - ஆரம்பத் தன்மையால்; ய; - யார்; ஏவம் - இவ்வாறு; வேத - அறிகிறானோ; ஸ; - அவன்; ஹ வை - நிச்சயமாக; ஸர்வான் - எல்லா; காமான் - ஆசைகள்; ஆப்னோதி - நிறைவேறப் பெறுகிறான்; வா - மேலும் ; ஆதி; ச - முதன்மையானவனாக பவதி - ஆகிறான்.

9. ஓங்கார மந்திரத்தின் முதற்பகுதியாகிய அகாரம்
விழிப்பு நிலையைக் களமாகக்கொண்ட வைசுவானரன்.
ஏனெனில், நிறையும் தன்மையாலும் ஆரம்பத்
தன்மையாலும் இரண்டும் சமமாக உள்ளன.
இவ்வாறு அறிபவனின் எல்லா ஆசைகளும் நிச்சய
மாக நிறைவேறுகின்றன. அவன் முதன்மையானவ
னாக ஆகிறான்.

மந்திரத்தின் முதற்பகுதியாகிய அ நமது விழிப்பு நிலைப் பரிமாணமாகிய வைசுவானரனுக்கு ஒப்பிடப்படுகிறது. அ விற்கும் விழிப்பு நிலைக்கும் இரண்டு பொதுப் பண்புகள் கூறப்படுகின்றன.

1. நிறையும் தன்மை: வாயைத் திறக்காமல் எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாது. வாயைத் திறக்கும் போதே அ என்ற எழுத்து உச்சரிக்கப்பட்டு விடுகிறது. எனவே எழுத்தோ சொல்லோ எதுவானாலும் அது அ என்ற எழுத்து கலந்தாகவே இருக்கும். அதாவது அ என்ற எழுத்து மற்ற எழுத்துக்கள் சொற்கள் அனைத்திலும் நிறைந்துள்ளது.

விழிப்புநிலையும் மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது. ஆழ்மனப் பதிவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்று கண்டோம். ஆழ்மனப் பதிவுகள் நமது விழிப்புநிலை அனுபவங்களின் விளைவுகள். எனவே கனவும் விழிப்பு நிலையின் தொடர்புடையதே. அதுபோலவே ஆழ்ந்த தூக்கத்திலும் விழிப்புநிலையின் அனுபவங்கள் இருக்கவே செய்கின்றன; தனித்தனியாக இல்லாமல் ஒன்றுதிரண்டு ஒரு திரளாக உள்ளன. எனவே விழிப்புநிலை மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது.

2. ஆரம்பத் தன்மை: பிரணவ மந்திரத்தின் ஆரம்பப் பகுதி அ. நமது அனுபவங்களிலும் ஆரம்ப நிலையாக அமைந்துள்ளது விழிப்புநிலை.

கனவு நிலை = தைஜஸன் = உ:

ஸ்வப்னஸ்தானஸ்தைஜஸ உகாரோ த்விதீயா மாத்ரா
உத்கர்ஷாதுபயத்வாத் வா உத்கர்ஷதி ஹ வை ஜ்ஞானஸந்ததிம்
ஸமானச்ச பவதி நாஸ்யாப்ரஹ்மவித் குலே பவதி ய ஏவம்
வேத //10//

ஸ்வப்னஸ்தான; - கனவுநிலையைக் களமாகக் கொண்ட; தைஜஸ: - தைஜஸன்; உகார: - உகாரம்; த்விதீயா மாத்ரா - இரண்டாம் பகுதி; உத்கர்ஷாத் - உயர்வால்; உபயத்வாத் - இரண்டின் தொடர்பால்; ய: - யார்; ஏவம் - இவ்வாறு; வேத - அறிகிறானோ; ஸ: - அவன்; ஹ வை - நிச்சயமாக; ஜ்ஞானஸந்ததிம் - அறிவை வளர்க்கிறான்; ஸமான: ச - சமமாக இருக்கிறான்; அஸ்ய - அவனது; குலே - குலத்தில்; அப்ரஹ்மவித் - ஞானி அல்லாதோர்; ந பவதி - பிறப்பதில்லை.

10. ஓங்கார மந்திரத்தில் இரண்டாம் பகுதி
யான உகாரம் கனவுநிலையைக் களமாகக்
கொண்ட தைஜஸன். ஏனெனில் உயர்வாலும்
இரண்டின் தொடர்பாலும் இரண்டும் சமமாக
உள்ளன. இவ்வாறு அறிபவன் கட்டாயமாக
அறிவை வளர்க்கிறான்; (சுக - துக்கம்போன்ற
இரட்டைகளில்) சமமாக இருக்கிறான். ஞானி
அல்லாத யாரும் அவனது குலத்தில் பிறப்ப
தில்லை.

ஓங்கார மந்திரத்தில் இரண்டாம் பகுதி உ. நிலைகளுள் இரண்டாவதாக அமைவது கனவு. இரண்டிற்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறப்படுகின்றன.

1. உயர்வு: ஓங்கார மந்திரத்தின் உ என்ற எழுத்தும் கனவுநிலையும் உயர்வானது என்று மந்திரம் கூறுகிறது. எப்படி?

ஓங்காரத்தை உச்சரிப்பதுபற்றி ஏற்கனவே கண்டோம். அது ஆரம்பத்தில் மென்மையாகவும் நடுவில் உரக்கவும் இறுதியில் மென்மையாகவும் உச்சரிக்கப்படுகிறது. உ உரக்க உச்சரிக்கப்படுவதால் உயர்வானதாகக் கூறப்படுகிறது.

அதுபோலவே, விழிப்புநிலையில் உணர்வுமனம் (ஞிணிணண்ஞிடிணிதண் ட்டிணஞீ) மட்டுமே செயல்படுகிறது. உணர்வுப் பகுதி நமது மனத்தின் மிகச் சிறு பகுதி மட்டுமே. இந்தப் பகுதியைச் செயல்படுத்துவது நமது மனத்தின் மிகப் பெரும் பகுதியான ஆழ்மனம் (ண்தஞஞிணிணண்ஞிடிணிதண் ட்டிணஞீ) ஆகும். கனவுநிலையில் உணர்வுமனம் ஓய்வில் ஆழ்ந்துவிடுகிறது; ஆழ்மனம் செயல்படுகிறது. ஆழ்மனத்தின் எல்லைகள் பரந்தது. எனவே கனவுநிலையின் எல்லைகளும் பரந்ததாக உள்ளது. விழிப்புநிலை உலகத்தின் எந்த நியதிகளும் சட்டதிட்டங்களும் அங்கே செல்லுபடியாவதில்லை. கனவில் பாம்பு பாட முடியும்; பசுவால் பறக்க முடியும். கனவுபற்றி ஆராய்ந்த அறிஞர்கள் நான்கு விதமான கனவுகளைக் கூறுகிறார்கள்.

1. விழிப்புநிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனவுகள் அமையலாம். எந்த நிகழ்ச்சியும் மனத்தில் ஒரு பதிவை (சம்ஸ்காரம்) விட்டுச் செல்கிறது. அந்தப் பதிவு ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகிறது. சில வேளைகளில் இந்தப் பதிவுகள் செயல்படத் தொடங்குகின்றன. அப்போது விழிப்புநிலை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகக் கனவுகள் அமையும்.

2. நமது ஆசைகளும் லட்சியங்களும் எண்ணற்றவை. இவற்றுள் சிலவற்றை மட்டுமே நம்மால் வெளியிடமுடியும். சமுதாயம், பெற்றோர், நண்பர்கள் என்று யாருக்காவது பயந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவற்றை நாம் ஆழ்மனத்தில் அமுக்கி வைத்துவிடுகிறோம். கனவுநிலையில் இவையும் செயல்படுகின்றன. ஆனால் பயம் காரணமாக அவை நேரடியாக வராமல் மறைமுகமாக வெளிப்படுகின்றன. கனவில் மங்கல நிகழ்ச்சிகளைக் கண்டால் உண்மையில் அமங்கலம் நிகழும் என்று வழக்கத்திலும் கூறப்படுவதுண்டு. அதாவது கனவில் நாம் காண்ப்பவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. பொருள் திரிந்து வருகின்ற கனவுகளும் உண்டு.

3. ஆழ்மனம் பரந்தது, ஆற்றல்மிக்கது. அதனால் எதிர்காலத்தைக் கூட காண முடியும். சிலவேளைகளில் எதிர்காலத்தைக் காட்டுவதாக சில கனவுகள் அமைவதுண்டு.

4. தெய்வீகக் கனவுகள், மிகச் சிலரின் வாழ்வில் கனவுகள் மூலமாக இறையருள் வெளிப்படுவதுண்டு. தரிசனங்கள், தெய்வீக அனுபவங்கள் போன்றவை கனவில் நிகழ்வதுண்டு.

இங்கே ஒரு கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் காண்கின்ற தெய்வீகக் கனவுகள் முதல் வகைக் கனவுகள் மட்டுமே. அதாவது, நாம் படித்த, பார்த்த சம்பவங்களின் தொடர்ச்சி மட்டுமே, கனவுக்குப் பிறகு அது நமது வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற விளைவை வைத்தே அந்தக் கனவு தெய்வீக கனவா அல்லது முதல் வகைக் கனவா என்பதை முடிவு செய்ய முடியும். உண்மையான தெய்வீகக் கனவு வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முற்றிலுமாக இறைவாழ்க்கையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் வாழ்க்கை பழையபடியே சென்று கொண்டிருக்குமானால் அது வெறும் முதல் வகைக் கனவு மட்டுமே.

இவ்வாறு விழிப்புநிலையைவிட, தூக்கத்தைவிட பலமுகப் பரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதால் கனவுநிலை உயர்வானது என்று சொல்லப்பட்டுள்ளது.

2. இரண்டின் தொடர்பு: நடுவில் அமைந்துள்ளதால் உ என்ற எழுத்து அ, ம் ஆகிய எழுத்துக்களுடன் தொடர்பு உடையதாக உள்ளது. அதுபோலவே கனவுநிலை மற்ற இரண்டு நிலைகளுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் இரண்டுடனும் தொடர்பு உடையதாகக் கூறப்பட்டுள்ளது.

தூக்கநிலை = ப்ராஜ்ஞன் =:

ஸுஷுப்தஸ்தான: ப்ராஜ்ஞோ மகாரஸ்த்ருதீய மாத்ரா
மிதேரபீதேர்வா மினோதி ஹ வா இதக்ம் ஸர்வமபீதிச்ச பவதி ய
ஏவம் வேத //11//

ஸுஷுப்தஸ்தான; - தூக்கத்தைக் களமாகக்கொண்ட; ப்ராஜ்ஞ; - பிராஜ்ஞன்; மகார: - மகாரம்; த்ருதீயா மாத்ரா - மூன்றாம் பகுதி; மிதே; - அளவிடும் தன்மையால்; அபீதே; வா - கிரகிக்கும் தன்மையால்; ய: - யார்; ஏவம் - இவ்வாறு; வேத - அறிகிறானோ; ஸ; - அவன்; ஹ வை - கட்டாயமாக; இதம் - இந்த; ஸர்வம் - அனைத்தையும்; மினோதி - அளக்கிறான்; அபீதி; ச - கிரகிப்பவனாகவும்; பவதி - ஆகிறான்.

11. ஓங்கார மந்திரத்தின் மூன்றாம் பகுதியான
மகாரம் ஆழ்ந்த தூக்கத்தைக் களமாகக்கொண்ட
பிராஜ்ஞன். ஏனெனில் அளவிடும் தன்மையாலும்
கிரகிக்கும் தன்மையாலும் இரண்டும் சமமாக
உள்ளன. இவ்வாறு அறிபவன் கட்டாயமாக
அனைத்தையும் அளப்பவனாகவும் கிரகிப்பவ
னாகவும் ஆகிறான்.

ஓங்கார மந்திரத்தில் மூன்றாம் பகுதி ம். நிலைகளுள் மூன்றாவதாக அமைவது ஆழ்ந்த தூக்கம். இரண்டிற்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறப்படுகின்றன.

1. அளவிடும் தன்மை: நெல் முதலிய தானியங்களை அளக்க நாழி, மரக்கால் முதலியவை பயன்படுகின்றன. இதில் முதலில் தானியத்தை நிரப்பி, அதன் அளவை அறிந்த பின்பு வெளியில் கொட்டி வைப்பார்கள். முதலில் நாழி வெறுமையாக இருக்கும், பிறகு அதில் தானியம் நிறைக்கப்படும். பிறகு மீண்டும் வெறுமையாக்கப்படும்.

அதுபோலவே அ வும், உ வும் ம் மில் ஒடுங்குகின்றன. மீண்டும் அதிலிருந்து வெளிவருகின்றன. இவ்வாறு, ம் என்பது ஒரு நாழியைப்போல் செயல்படுவதாக இந்த மந்திரம் கூறுகிறது.

அவ்வாறே விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் அனைத்தும் தூக்க நிலையில் நிரப்பப்படுகின்றன. மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்போது அனைத்தும் வெளிவருகின்றன. தூக்கநிலையும், ஒரு நாழியைப்போல் அளவிடுவதாக உள்ளது.

2. கிரகிக்கும் தன்மை: ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும்போது அ வும், உ வும் ம் மில் ஒடுங்குவது போல் உள்ளது. அதாவது ம் அ வையும், உ வையும் கிரகித்துக்கொள்கிறது.

ஆழ்ந்த தூக்க நிலையிலும் விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் கிரகிக்கப்படுகின்றன. ஒரு திரளாக வைக்கப்படுகின்றன.

ஓங்கார மந்திரத்தை அ, உ , ம் என்ற பகுதிகளாக அறிபவன் குறிப்பிட்ட சில பலன்களைப் பெறுவதாக 9-11 வரையுள்ள மந்திரங்களில் காண்கிறோம். வெறுமனே படிப்பதால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று உபநிஷதம் கூறுவதாகக் கொள்ளக்கூடாது. அறிதல் என்றால் சாதனைகள் செய்து, அனுபூதியில் அறிதல் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்மா:

அமாத்ரச்சதுர்த்தோ ஸவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபசம:
சிவோஸத்வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விசத்யாத்-
மனாஸஸத்மானம் ய ஏவம் வேத ய ஏவம் வேத //12//

சதுர்த்த: - நான்காம் பகுதி; அமாத்ர: - பகுதி இல்லாதது; அவ்யவஹார்ய; - செயல்களற்றது; ப்ரபஞ்ச உபசமம் - பிரபஞ்ச உணர்வு மறைந்தது, சிவம் - மங்கலமானது; அத்வைதம் - இரண்டற்றது; ஏவம் - இவ்வாறு; ஆத்மா ஏவ - ஆன்மாவே; ஓங்கார; - ஓங்காரம்; ய; - யார்; ஏவம் - இவ்வாறு; வேத - அறிகிறானோ; ஆத்மானம் - ஆன்மாவை;
ஆத்மனா - ஆன்மாவால்; ஸம்விசதி - அடைகிறான்.

12. ஓங்கார மந்திரத்தின் நான்காம் பகுதி, பகுதி
என்று சொல்ல முடியாதது, செயல்கள் அற்றது,
பிரபஞ்ச உணர்வு கடந்தது, மங்கலமானது,
இரண்டற்றது. இந்த ஓங்காரமே ஆன்மா இவ்வாறு
அறிபவன் ஆன்மாவை ஆன்மாவால் அடைகிறான்.

சொற்களால் விளக்க முடியாத பகுதியாக அமைந்துள்ளது. நான்காம் பகுதி. மொத்தப் பரிமாணம்.

ஓம் என்ற மந்திரத்தை உச்சிரிக்கும்போது, ம் என்பதில் மந்திரம் முடிந்தபிறகு மீண்டும் உச்சிரிக்குமுன் ஓர் இடைவெளி இருக்கும். மிகச் சிறியதானாலும் இடைவெளி இருந்தே தீரும். அதுவே ஓங்கார மந்திரத்தின் நான்காம் பகுதி. இது அர்த்த மாத்திரை என்று கூறப்படுகிறது.

அ, உ, ம், அமைதிநிலை - இந்த நான்கும் சேர்ந்தது ஓங்காரம். சேர்ந்தது என்றால் ஒரு கூட்டுப்பொருள் போன்றது. என்று பொருள் கொள்ளக்கூடாது. அ, உ - வில் ஒடுங்குகிறது. உ, ம்- இல் ஒடுங்குகின்றது. ம் அமைவதில் ஒடுங்குகிறது. இறுதியில் அனைத்தும் அமைதியில் நிலைக்கிறது. அவ்வாறே விழிப்பு, கனவு, தூக்கம் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்கி, ஆன்மா மட்டுமே எஞ்சுகின்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.

பிற்சேர்க்கை:

1 ஓங்கார தியானம் (பிற்சேர்க்கை)

எல்லாம் ஒன்றே என்ற உண்மையை அறிவதும் அனுபவிப்பதும் வாழ்க்கையின் லட்சியம். ஏன்? ஏனெனில் அதை உணர்ந்தவனுக்கே உண்மையான அமைதி உரித்தாகிறது. மனிதன் தேடுவது அமைதியையே அல்லவா! கட உபநிஷதத்தை (2.2.13) மேற்கோள் காட்டி சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: யார் இந்த மரணக் கடலுக்கிடையில் ஒன்றேயான அதனைக் காண்கிறானோ, மிதந்து செல்லும் இந்தப் பிரபஞ்சத்தில் நிலையான ஒன்றைக் காண்கிறானோ, என்றும் மாறாத அந்த ஒன்றை அனுபூதியில் அறிகிறானோ அவனுக்கு அழிவில்லாத அமைதி கிடைக்கும். வேறு யாருக்கும் இந்த அமைதி கிடைக்காது. கிடைக்கவே கிடைக்காது! இருப்பதாகிய இந்த ஒன்றை அறிய வேண்டும்.

ஆனால் அறிவதும் அனுபவிப்பதும் வெறும் வார்த்தைகளால் நடப்பதில்லை. அதற்கு நாம் பாடுபட வேண்டும். முனிவர்கள் கூறிய வழியைப் பின்பற்ற வேண்டும். மாண்டூக்ய உபநிஷதம் காட்டும் வழி என்ன?

ஓங்கார தியானம்.

உலகமும் உயிர்களும் இறைவனும் ஒன்றே என்ற உண்மை ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுவதை இந்த உபநிஷதத்தில் கண்டோம். எனவே அந்த ஓங்காரத்தை ஜபிப்பதும் தியானிப்பதும் இந்த உண்மையை அனுபவிப்பதற்கான சாதனைகள் என்பதை ஸ்ரீகௌடபாதர் தமது மாண்டூக்ய காரிகையில் விளக்குகிறார். அந்தப் பகுதியை (1.24-29) இங்கே காண்போம்.

ஓங்காரம் பாதசோ வித்யாத்பாதா மாத்ரா ந ஸம்சய:
ஓங்காரம் பாதசோ ஜ்ஞாத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

ஓங்காரத்தை ஒவ்வொரு பரிமாணமாக அறிய வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பரிமாணமும் அதன் ஒவ்வோர் எழுத்துக்களாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு பரிமாணமாக அறிந்த பிறகு வேறு எதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்.

யுஞ்ஜீத ப்ரணவே சேத: ப்ரணவோ ப்ரஹ்ம நிர்பயம்
ப்ரணவே நித்யயுக்தஸ்ய ந பயம் வித்யதே க்வசித்

ஓங்காரத்தில் மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும். ஏனெனில் பயம் எதுவும் தீண்டாத பரம்பொருளே அது. ஓங்காரத்தில் நிலைபெற்றவனுக்கு பயம் என்பதே கிடையாது.

ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத;
அபூர்வோ ஸனந்தரோ ஸபாஹ்யோ ஸநபர: ப்ரணவோஸவ்யய:

உருவ நிலையில் தெய்வங்களாகவும் அருவ நிலையில் உயர் பரம்பொருளாகவும் இருப்பது ஓங்காரமே. அது எதிலிருந்தும் தோன்றியதல்ல, அதிலிருந்தும் எதுவும் தோன்றுவதில்லை. அகமும் புறமும் அற்ற அனைத்துமான அழிவற்ற ஒன்று அது.

ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர் மத்யமந்தஸ்ததைவ ச
ஏவம் ஹி ப்ரணவம் ஜ்ஞாத்வா வ்யச்னுதே ததனந்தரம்

ஆரம்பமும் நடுவும் இறுதியும் ஓங்காரமே. ஓங்காரத்தை இவ்வாறு அறிபவன் ஒன்றேயான பரம்பொருளுடன் ஒன்றுகிறான்.

ப்ரணவம் ஹீச்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதம்
ஸர்வ வ்யாபினம் ஓங்காரம் மத்வா தீரோ ந சோசதி

எல்லோருடைய இதயத்திலும் இறைவனாக விளங்குவது இந்த ஓங்காரமே. எங்கும் நிறைந்ததான இந்த ஓங்காரத்தை தியானிப்பவன் கவலையற்றிருக்கிறான்.

அமாத்ரோ ஸனந்த மாத்ரச்ச த்வைதஸ்யோபசம: சிவ://
ஓங்காரோ விதிதோ யேன ஸ முனிர்னேதரோ ஜன: //

இந்த ஓங்காரத்தை அளப்பதற்கு அளவுகோல் கிடையாது. அது எல்லையற்றது, மங்கலமானது, அங்கே இருமைகள், கிடையாது. ஓங்காரத்தை அறிபவனே உண்மையான முனிவன், வேறு யாரும் அல்ல.

ஓங்கார மந்திரத்தை ஈடுபாட்டுடன் தியானிப்பதால் வேதாந்த உண்மைகள் அனுபவ உண்மைகளாகும் என்று அருணகிரி நாதர் கூறுகிறார்.( ஓமெழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே - காமியத்தழுந்தி என்று தொடங்கும் திருப்புகழ்ப்பாடல் வரிகள்.)

2. ஓங்கார ஜபமும் தியானமும்:

ஓங்காரத்தை உச்சரிப்பது எப்படி?

தைல தாராம் இவாச்சின்னம் தீர்க கண்டா நினாதவத் (சாண்டில்ய உபநிஷதம், 1.6.) மணியோசை போலவும், எண்ணெய் ஒழுக்குபோல் இடைவிடாமலும் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும்.

மணியோசை அமைதியிலிருந்து எழுந்து உயர்கிறது. பிறகு அமைதியில் கரைகிறது. அதுபோல் ஓங்காரத்தை உச்சரிக்கும்போதும் மென்மையாக ஆரம்பித்து படிப்படியாக ஒலியை அதிகரித்து மீண்டும் மென்மையாக்கி நிறுத்த வேண்டும். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உச்சரிக்க வேண்டும். ஒருமுறை உச்சரிக்கும்போது இடைவெளி வரக்கூடாது. என்பதைக் குறிப்பிடவே எண்ணெய் ஒழுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

ஓங்கார தியானம் செய்வது எப்படி?

அகாராதி த்ரயாணாம் ஸர்வ காரணம் ஏகாக்ஷரம் பரம்
ஜ்யோதி: ப்ரணவம் பவதி இதி த்யாயேத்

அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓரெழுத்து மந்திரத்தை மேலான ஒளி வடிவாக தியானிக்க வேண்டும்.

ஹ்ருத்பத்ம் கர்ணிகா மத்யே ஸ்திர தீப நிபாக்ருதிம்
அங்குஷ்ட்ட மாத்ரம் அசலம் த்யாயேத் ஓங்காரம்
ஈச்வரம்

இறைவடிவான ஓங்காரத்தை இதயத் தாமரையின் நடுவில் பெருவிரல் அளவிலான அசைவற்ற தீபம்போல் தியானிக்க வேண்டும்.

ஓங்கார தியானம் எப்படி செயல்படுகிறது?

ஓங்காரத்தை ஒளிவடிவாக தியானிக்க வேண்டும் என்று கண்டோம். உரிய முறையில் இந்த தியானம் செய்யப்படும் போது இதயத் தாமரை மலர்கிறது; இறைக் காட்சி வாய்க்கிறது.

இதயத் தாமரை எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?

புஷ்ப மத்யே யதா கந்த: பயோ மத்யே யதா
க்ருதம் தில மத்யே யதா தைலம் பாஷாணேஷு இவ
காஞ்சனம் ஹ்ருதி ஸ்தானே ஸ்திதம் பத்மம் தஸ்ய
வக்ரம் அதோ முகம் ஊர்த்வ நாலம்....

பூவில் மணம் எவ்வாறு பொருந்தியிருக்கிறதோ, பாலில் எவ்வாறு நெய் பரவியிருக்கிறதோ, எள்ளில் எவ்வாறு எண்ணெய் இருக்கிறதோ, மூலப்பொருளில் எவ்வாறு பொன் இருக்கிறதோ அவ்வாறு இதயத்தில் தாமரை உள்ளது. அதன் தண்டு மேலாகவும் மொட்டு கீழாகவும் உள்ளது.

சாதாரண நிலையில் இதயத் தாமரை மலராமல் கூம்பிய நிலையில் தலைகீழாக உள்ளது. உரிய முறையில் ஓங்காரத்தை உச்சரித்து தியானம் செய்யும்போது அது நிமிர்ந்து மலர்கிறது.

அகாரே ரேசிதம் பத்மம் உகாரேண ஏவ பித்யதே//
மகாரோ லபதே நாதம் அர்தமாத்ரா து நிச்சலா சுத்த ஸ்ஃபடிக
ஸங்காசம் நிஷ்கலம் பாபநாசனம் லபதே யோக யுக்தாத்மா
புருஷ தத் பரம் பதம்

அகாரத்தை உச்சரிக்கும்போது இதயத் தாமரை அவிழ்கிறது. உகாரத்தை உச்சரிக்கும்போது மலர்கிறது. மகாரத்தை உச்சரிக்கும்போது நாதம் எழுகிறது. அர்த்த மாத்திரை வேளையில் அமைதியில் ஆழ்கிறது. இந்த இதயம் தூய படிகம் போன்றது, பகுதிகள் அற்றது. இதயத் தாமரை மலரும்போது பாவங்கள் அழிகின்றன. யோகத்தில் நிலைபெற்றவன் இந்த இதயத் தாமரையில் மேலான இறைவனைப் பெறுகிறான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement