Load Image
Advertisement

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-5)

அம்பையின் நிலையைப் பார்த்து, துருபதனும் கலங்கித்தான் போனான். மன்னா! பீஷ்மர் செய்த தவறால் நான் பந்து போல உதைத்து விளையாடப்படுகிறேன். பீஷ்மரும் ஏற்கவில்லை, அவர் சகோதரனும் என்னை ஏற்கவில்லை. நான் காதலித்த சால்வனும் என்னை ஏற்க மறுக்கிறான். எனக்கு வழி தெரியவில்லை. வேறுவழியின்றி தவம் செய்ய இமயம் சென்றேன். தவத்திற்கு பயனாக முருகப்பெருமான் இந்த தேவலோக தாமரைப்பூக்களாலான மாலையைத் தந்து, இதை அணிபவரால் பீஷ்மருக்கு முடிவு ஏற்படும் என்றார். இதை நீ அணிந்து கொண்டு என்னையும் விவாகம் செய்து கொண்டு எனக்கொரு வாழ்க்கையைத் தரவேண்டும், என்று கெஞ்சினாள். ஆனால், அந்த கெஞ்சலுக்குப் பலனில்லை.துருபதன் பீஷ்மரின் சகலவல்லமையும் நினைத்துப் பார்த்து முடிவில், அம்பை... உன் விருப்பத்தை என்னாலும் நிறைவேற்ற முடியாது. பீஷ்மரைப் பகைத்துக் கொண்டு அவருக்கு காலனாக நான் மாறத் தயாரில்லை. எனவே, என்னை மன்னித்து இங்கிருந்து போய்விடு.. என்று கெஞ்சினான். அம்பை அதைக் கேட்டு அழுதாள். இங்கே சற்று அம்பையை விட்டுவிட்டு சில சிந்தனைகளுக்கு ஆட்படுவோம். மகாபாரதக் கதையைப் பற்றிச் சிந்திக்கும்போது பாஞ்சாலியான திரவுபதியும், அவளுக்கு ஏற்பட்ட துகில் உரியும் காட்சியும் தான் அனைவரின் நினைவிலும் வரும்.

இந்த தேசத்தில் ஒரு பெண்ணின் மானக்கேடு என்பது மறக்கக்கூடிய ஒன்றல்ல. அதை விடப் பெரிய பாவமும் இல்லை எனலாம். பெண்களுக்கான இப்பாவத்தை பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக நம் சாஸ்திரம் கூறுகிறது. மனிதப் பிறப்பெடுத்து விட்டால், பாவம் செய்யாமல் வாழ்வது முற்றும் துறந்த முனிவர்களுக்கு கூட சற்றும் சாத்தியமில்லாத ஒரு விஷயமே... நாம் நடந்து செல்கையில், நம் பாத அடிகளுக்கு கீழ் எறும்புகளும், பூச்சிகளும் இருந்து நாம் அறிந்தோ, அறியாமலோ மிதிக்கப்போய் அதற்கான காரணப்பாவம் நம் கணக்கில் ஏறிவிடும். இதனாலேயே, ஆண்டாண்டு காலத்திற்கு அசைவற்று கல்பாறை போல ஒரே இடத்தில் அமர்ந்து தவத்தில் மூழ்கிப்போவதை முனிவர் பெருமக்கள் பெரிதும் விரும்பினர். மனம் மந்திரத்தை ஜெபித்த நிலையில், துளியும் செயலின்றிப் போவதால் வினை என்கின்ற ஒன்றே நிகழாமல் போய், அதனால் அறியாமல் செய்யும் பாவத்திற்கும் இடமில்லாமல் போகிறது. இப்படி முயற்சிகள் செய்தாலும் கூட பாவத்தின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, ஒருபாவமும் நான் செய்யவில்லை என்று கூற முடியாது. இவற்றைக்கூட தெரிந்து செய்த பாவம், தெரியாமல் செய்த பாவம் என்று இருவிதமாக பிரித்துப் பார்க்கப்படுகிறது.

இதில் தெரியாமல் செய்த பாவங்கள் பின்தொடராமல், அவைகளுக்கு வாழுங்காலத்திலேயே பரிகாரம் காணவே, நம் முன்னோர் பல வழிமுறைகளைக் காட்டியுள்ளனர். நுண்ணுயிர்களுக்கு நம்மால் ஏற்படும் பாதிப்புக்குப் பரிகாரம் தான், தினமும் அரிசிமாவினால் கோலம் போடுவது என்பதாகும். பசுமாட்டைப் பேணுவது, வேம்பு, அரசு போன்ற மரங்களைப் பேணுவது, புற்றுக்குப் பால் தெளிப்பது, காக்கைக்குச் சோறிடுவது, பறவைகள் தாகம்தீர தண்ணீர் வைப்பது, மரம் நடுவது என்று தர்மகாரியங்கள் பலவற்றை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கட்டி விட்டனர்.இவைகளையும் கடந்து வாக்கால், மனதால் நாம் பாவங்களைச் செய்கிறோம். இவைகளுக்கும் நம் முன்னோர் பரிகாரங்களை வைத்துள்ளனர். தினமும் கோயிலுக்குச் செல்வது, தேர் இழுப்பது, உழவாரப்பணி செய்வது, இறைநாமங்களைச் சொல்வது ஆகியவையே அந்த பரிகாரங்கள். இதுதவிர, திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல் உள்ளிட்ட தடித்த பாவங்களால் வாழ்க்கை நாசமாகாமல் இருக்கவும் நம் சான்றோர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஒரு சிலர் செய்த பாவத்தை எண்ணிவருந்திய பிறகும் அதன் பலன் தொடரத்தான் செய்கிறது. இவர்களுக்குச் சான்றோர்கள் நதிநீரைப் பிரதானப்படுத்தினார்கள்.

கங்கை போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடும்போது, பாவங்கள் நீங்கி புனிதமாவது பற்றி சொல்லி இருக்கிறார்கள். காசிக்கும், கங்கைக்கும் போக முடியாதவர்களுக்குத் தான் மாமாங்கநீராடல், கும்பமேளா போன்றவையும், கோயில்களில் குளங்களும் உருவாக்கப்பட்டன. பாவம் என்பது ஒரு பெரும்சுமை. அதை எப்போதும் சுமந்தபடி இருக்க தேவையின்றி, நாம் நிம்மதியாக வாழத்தான் இத்தனை ஏற்பாடுகள். இதனால், பாவிகளின் எண்ணிக்கை குறைந்து, ஒருவித நிம்மதி உருவாகி அதன் காரணமாக நாட்டில் சுபிட்சமான மழைப்பொழிவு, பயிர்களின் விளைச்சல், நல்ல கலைகள் வளர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இது ஒரு சமன்படுத்தும் நிகழ்வு. இப்படி மனித மனத்திற்கும் அவன் செயல்பாடுகளுக்கும் ஏற்ப பருவச்சூழல்களும் மாறுவது நிகழ்கிறது. இதை விஞ்ஞானப்பூர்வமாகவும் பார்க்க முடியும். அம்பை என்னும் ஒரு பாத்திரத்தில் ஆரம்பித்த சிந்தனை பாவபுண்ணியங்களைப் பற்றியதாக மாறி, அவைகளுக்கான பரிகாரங்களைப் பற்றி எண்ணி முடித்த நிலையில் மீண்டும் அம்பையிடம் வருவோம். அம்பை உண்மையில் அந்தப் பிறப்பில் ஒரு பாவமும் செய்யவில்லை. அவளைக் கவர்ந்து சென்ற பீஷ்மரால் தான் அவளுக்கு அடுக்கடுக்காய் துன்பங்கள்.

தவம் செய்து முருகப்பெருமானிடம் வரசித்தியாக, ஒரு மாலையைப் பெற்ற பிறகும் கூட, அவளுக்கு விமோசனம் ஏற்படாமல் போனது தான் விந்தை. அம்பை இதன் பின் என்னவாகிறாள் என்பதுஒருபுறம். ஆனால், அவள் இப்படி ஆகிட காரணமான பீஷ்மர் இந்த பாவத்தை தெரிந்து செய்யவில்லை. தெரிந்து செய்தாலும், தெரியாது செய்தாலும் சில பாவங்கள் அதற்கான தண்டனையை அளித்திட தவறுவதே இல்லை. இம்மட்டில் பீஷ்மரும், துருபதனும் அம்பையை புறக்கணித்ததன் பயன் தான் பாஞ்சாலி துகில் உரியப்பட ஒரு காரணமானது. பெண்பாவம் என்பது அத்தனை சக்தி மிக்கது. அது மாமாங்க நீராடல்களாலும் நீங்காதது என்பதற்கு அம்பையே ஒரு சான்று. அம்பையை துருபதன் கைவிடவும், அவள் ஒரு காரியம் செய்தாள். இனி எவரிடமும் போய் கெஞ்சிக் கொண்டிராமல் மீண்டும் தவத்தில் மூழ்கி அப்படியே இறந்துவிடுவது எனத் தீர்மானித்தாள். முருகப்பெருமான் அளித்த அந்த தேவலோகத்து மலர் மாலையை துருபதன் அரண்மனை வாயில்கதவில் சூட்டினாள். அதை எடுத்து அணிபவர் மூலம் பீஷ்மருக்கு காலகதி உருவாகட்டும் என்று எண்ணியவளாகப் புறப்பட்டாள். இதை அறிந்த துருபதன், அவளிடம் வந்து,தயவுசெய்து இந்த மாலையை எடுத்துக் கொண்டு ஆளை விடு என்று கெஞ்சிப் பார்த்தான். அம்பை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் நடந்தாள். பார்த்தான் துருபதன். அந்த மாலையை சாத்தப்பட்ட கதவுக்கு காவல் போட்டான்.

தப்பித் தவறியும் அந்த மாலையை யாரும் தொட்டுவிடவோ, அணிந்து கொண்டு விடவோ கூடாது என்று உத்தரவும் போட்டான். ஆனால், எப்போதும் விதி என்பது மதி நடந்து வரும்போது, பறந்து வரும் ஒன்றாயிற்றே!இங்கேயும் அந்த விதி வேலை செய்தது. துருபதனுக்கு சிகண்டினி என்ற பெண் இருந்தாள். பருவவயதை எட்டும் நிலையில், விளையாட்டாக ஒருநாள் அந்த மாலையை எடுத்து அணிந்து கொண்டு விட்டாள். காவலர்களை எல்லாம் மீறி, இந்த விஷயம் நடந்து விட்டது. மகளின் செயலை அறிந்த துருபதன் பதைத்துப் போனான். இதை பீஷ்மர் அறிந்தால், தனக்கும் சரி... சிகண்டினிக்கும் சரி... நல்லதல்ல என்று பயந்தவன் சிகண்டினியை விலக்கி வைக்கத் தயாராகி விட்டான். இங்கே இருக்காதே... எங்காவது சென்று விடு என்று துருபதன் கூறவும், சிகண்டினியும் தவக்கோலம் பூண்டாள். கங்கை நதிக்கரையோரமாக தவப்பணியாற்றி வந்து, இஷீக என்னும் முனிவரது ஆஸ்ரமத்தை அடைந்தாள். அவரும் சிகண்டினி யாரென்பதைப் புரிந்து கொண்டார். அம்பையிடம் ஆரம்பித்த பிழை சிகண்டினியைத் தொடர்வதை உணர்ந்தார். சிகண்டினியும் அவருக்கு சிறப்பான தொண்டு செய்தாள். இருப்பினும், அவளை அங்கேயே வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

அந்த சமயத்தில், கங்கை தொடங்கும் இமயத்து அடிவாரத்தில் கந்தர்வ புருஷர்கள் வந்து ஆராதிக்கும், விபஜனம் என்னும் விழா தொடங்கியது. அதில் தும்புரு என்னும் கந்தர்வ ராஜனுக்கு பணி செய்ய சிகண்டினியை அனுப்பினார் இஷீகர். இந்த கந்தர்வ ராஜனால் நீ மீண்டும் உன் தந்தையை அடையும் வாய்ப்பு ஏற்படும், என்றும் அவர் சொன்னார். அப்படித்தான் இறுதியில் ஆனது. அங்கு வந்த கந்தர்வர்களில் ஒருவன் தன் ஆண் உருவை மாற்றி பெண் உருக் கொள்ள விரும்பினான். சிகண்டினியும் தான் பெண்ணாக இருப்பதற்குப் பதிலாக ஆணாக இருந்தால் வாழ்வை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதினாள். எனவே, தன் உருவத்தை அந்த கந்தர்வனுக்குத் தர தயாரானாள். இத்தகைய மாற்றங்கள் கந்தர்வர்களுக்கு கைவந்த கலை. அவர்களின் ஒப்பந்தப்படி இருவரும் உருமாறிக் கொண்டனர். அழகிய கந்தர்வனின் வடிவை அடைந்த சிகண்டினி ஆணாக மாறி,சிகண்டி ஆனான்(ள்). இந்த சிகண்டி என்ன செய்யப் போகிறான்?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement