Load Image
Advertisement

வாழ்க்கையைத் தொடங்கிய விதம்!

என் மூத்த சகோதரர் என்னைப் பற்றி எவ்வளவோ அதிக நம்பிக்கைகளையெல்லாம் வைத்திருந்தார். பணம், பெயர், புகழ் ஆகியவைகளில் அவருக்கு ஆசை அதிகம். அவர் விசாலமான உள்ளம் படைத்தவர். அளவுக்கு மிஞ்சிய தாராள குணமும் உள்ளவர். அதோடு, அவர் கபடமற்ற சுபாவமும் உடையவர் ஆதலின் அவருக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் என்னிடம் அதிக கட்சிக்காரர்கள் வரும்படி செய்யலாம் என்று அவர் நம்பினார். அத்துடன் என் வக்கீல் தொழில் பிரமாதமான வருவாய் உள்ளதாக இருக்கப் போகிறது என்றும் எண்ணிக் கொண்டார். அந்த எண்ணத்தில் வீட்டுச் செலவு மிதமிஞ்சிப் போகவும் அனுமதித்து விட்டார். நான் தொழில் நடத்தவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் எதையும் அவர் பாக்கி வைக்கவில்லை. நான் வெளிநாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்துகொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக் கொண்டு விட்டனர். மற்றக் கட்சியாரோ, எனக்கு விதித்திருந்த சாதிக் கட்டுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக் அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் என்னை நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், என்னிடம் என் சகோதரருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதே போல் அவரிடமும் எனக்குப் பக்தி உண்டு. ஆகையால், அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து, அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம் போலச் செய்து வந்தேன். இவ்விதம் திரும்பவும் சாதியில் சேர்த்துக் கொள்ளுவதைப் பற்றிய தொல்லை ஒருவாறு தீர்ந்தது. என்னைச் சாதியில் சேர்த்துக் கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத் தோன்றவும் இல்லை. அவர்களில் சிலர் என்னை வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன். சாதிக்கட்டுப்பாடு சம்பந்தமான விதி முறைகளையெல்லாம் மதித்து நடந்துகொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின் படி என் மாமனார். மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாருமே எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால், அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் குடிப்பதுகூட இல்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர். பகிரங்கமாகச் செய்யாததை ரகசியமாகச் செய்வது என்பது என் இயல்புக்கே நேர் விரோதமானது. இவ்விதம் என்மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் வைக்காமல் நான் நடந்து கொண்டதன் பலனாக, எனக்குச் சாதித் தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாது போயிற்று. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திடநம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக் கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட நான் முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின் அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்குப் பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்த நான் திரும்பயதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்குப் பதிலாக, நான் கிளர்ச்சிச் சுழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்;கொள்ளுவதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன். என் மனைவியுடன் எனக்கு இருந்த உறவு, இன்னும் நான் விரும்பிய வகையில் அமையவில்லை. எனக்கு இருந்த சந்தேகக் குணத்தை என் இங்கிலாந்து வாசமும் போக்கக் காணோம். சின்ன விஷயத்திற்கெல்லாம் கூட, என் மனைவி மீது முன்போல் சந்தேகப்பட்டு எரிந்து விழுந்து கொண்டிருந்தேன். ஆகையால் நான் கொண்டிருந்த ஆசைகளெல்லாம் நிறைவேறாமலே இருந்தன. என் மனைவி எழுதப் படிக்கத் கற்றுக்கொண்டாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அவளுடைய படிப்புக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தேன். ஆனால், இதில் என் காமம் வந்து குறுக்கிட்டது. என்னுடைய குறைபாடுகளுக்காக அவள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. ஒரு சமயம் அவளை அவளுடைய தந்தையார் வீட்டிற்கு அனுப்பிவிடும் அளவுக்குக்கூட போய்விட்டேன். அவளைக் கொடிய மனத் துயரத்திற்கு ஆளாக்கிய பிறகே, திரும்ப அழைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். இவையெல்லாம் என்னுடைய பெருந்தவறுகள் என்பதை பின்னால் உணர்ந்தேன். குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் விஷயத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன். என் அண்ணனுக்குக் குழந்தைகள் உண்டு. நான் இங்கிலாந்து சென்ற போது, வீட்டில் விட்டுச் சென்ற என் பையனுக்கும் இப்போது நான்கு வயது. அச்சிறு குழந்தைகளுக்குத் தேகாப்பியாசம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் உடல் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பது என் ஆவல். என்னுடைய நேரான மேற்பார்வையில் அக்குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்றும் நினைத்தேன். இதில் என் சகோதரரின் ஆதரவும் எனக்கு இருந்ததால் என் முயற்சியில் அநேகமாக வெற்றியும் பெற்றேன். குழந்தைகளுடன் கூடியிருப்பதில் எனக்கு அதிகப் பிரியம். அவர்களுடன் விளையாடி, வேடிக்கை செய்து கொண்டிருக்கும் வழக்கம், இன்றைக்கும் என்னிடம் அப்படியே இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு நான் நல்ல உபாத்தியாயராக இருப்பேன் என்ற எண்ணம் அப்பொழுது முதல் எனக்கு இருந்து வருகிறது. உணவுச் சீர்திருத்தம் அவசியமானது என்பது தெளிவு. ஏற்கனவே வீட்டில் தேநீரும் காப்பியும் புகுந்துவிட்டன. நான் இங்கிலாந்து திரும்பியதும், ஒருவிதமான ஆங்கிலச் சூழ்நிலை வீட்டில் இருக்கும்படி செய்வதே சரி என்று என் சகோதரர் நினைத்துவிட்டார். அதனால், எப்பொழுதோ விஷேட சமயங்களில் மட்டும் உபயோகிப்பதற்கென்று வைத்திருந்த பீங்கான் சாமான்கள் முதலியன தினசரி உபயோகத்திற்கே வந்துவிட்டன. என்னுடைய சீர்திருத்தங்கள் அதை பூர்த்தி செய்தன. தேநீருக்கும் காப்பிக்கும் பதிலாக, ஓட்ஸ் கஞ்சியையும் கோக்கோவையும் புகுத்தினேன். உண்மையில் தேநீருடனும் காப்பியுடனும் இவை அதிகப்படியாகவே சேர்ந்துவிட்டன. ஐரோப்பிய உடையையும் புகுத்தி, ஐரோப்பிய மயமாக்குவதைப் பூர்த்தி செய்தேன். இவ்வாறு செலவுகள் அதிகமாகிக்கொண்டே போயின ஒவ்வொரு நாளும் புதிய சமான்கள் சேர்க்கப்பட்டு வந்தன யானையைக் கட்டித் தீனிபோடும் கதை ஆகிவிட்டது. இந்தச் செலவுகளுக்கெல்லாம் வேண்டிய பணத்திற்கு எங்கே போவது ? ராஜ்கோட்டில் நான் பாரிஸ்டர் தொழிலை ஆரம்பிப்பதென்றால் அது கேலிக்கு இடமானதாகும். தகுதி பெற்ற ஒரு வக்கீலுக்குத் தெரிந்தது கூட எனக்குத் தெரியாது. என்றாலும், அவருக்குக் கொடுப்பதை விட எனக்குப் பத்துமடங்கு அதிகக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன் * அப்படி என்னை வக்கீலாக வைத்துக் கொள்ள, எந்தக் கட்சிகாரரும் முட்டாள் அல்ல. அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்துவிடுகிறார் என்றே வைத்துக் கொண்டாலும் என்னுடைய அறியாமையுடன் அகம்பாவத்தையும் மோசடியையும் புதிதாகச் சேர்த்து உலகிற்கு நான் பட்டிருக்கும் கடனை இன்னும் அதிகமாக்கிக் கொள்ளுவதா ? ஹைகோர்ட்டு அனுபவத்தைப் பெறுவதற்கும், இந்திய சட்டத்தைப் படித்துக் கொள்ளுவதற்கும், முடிந்தவரையில் வழக்குகள் கிடைக்கும் படி செய்து கொள்ளுவதற்கும் நான் பம்பாய் போவது நல்லது என்று நண்பர்கள் யோசனை கூறினர். இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, அப்படியே பம்பாய்க்குப் போனேன். பம்பாயில் என்னைப் போன்றே தகுதியற்றவரான ஒரு சமையற்காரரை வைத்துக் கொண்டு, குடித்தனத்தை ஆரம்பித்தேன் அவர் ஒரு பிராமணர். அவரை வேலைக்காரராகப் பாவித்து நடத்தாமல், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராகவே நடத்தினேன். அவர், மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ளுவாரேயன்றித் தேய்த்துச் குளிக்கமாட்டார். அவருடைய வேட்டி ஒரே அழுக்காயிருக்கும் பூணூலும் அப்படித்தான். சாத்திரங்களைப் பற்றியே அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவரை விட நல்ல சமையற்காரர் எனக்குக் கிடைப்பது எப்படி ? ரவிசங்கர் என்பது அவர் பெயர். ரவிசங்கர், உமக்குச் சமையல் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உமக்குச் சந்தியா வந்தன மந்திரம் முதலியன தெரிந்தே இருக்கவேண்டுமே ? என்று கேட்டேன். அதற்கு அவர், சத்தியாவந்தன மந்திரமா, ஐயா கலப்பையே எங்கள் சந்தியாவந்தனம், மண்வெட்டியே எங்கள் அன்றாட அனுஷ்டானம். அந்த வகையைச் சேர்ந்த பிராமணன் நான். உங்கள் கிருபையைக் கொண்டு நான் வாழவேண்டியவன். இல்லாவிட்டால் எனக்கு விவசாயம் இருக்கவே இருக்கிறது என்றார். ஆகவே, ரவிசங்கருக்கும் நான் ஆசானாக இருக்க வேண்டியதாயிற்று. எனக்கோ வேண்டிய அவகாசம் இருந்தது. சமையல் வேலையில் பாதியை நானே செய்ய ஆரம்பித்தேன். கறிகாய்ச் சமையலில் ஆங்கிலப் பரிசோதனையெல்லாம் புகுத்தினேன். ஓர் எண்ணெய் அடுப்பு வாங்கினேன். ரவிசங்கருடன் அடுப்பாங்கரை வேலைகளைக் கவனிக்கத் தலைப்பட்டேன். பிறருடன் ஒரே பந்தியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ரவிசங்கருக்கும் அது கிடையாது. ஆகவே, இருவரும் சேர்ந்து சுகமாகவே வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் ஒன்றே ஒன்றுதான் குறுக்கே நின்றது. அதாவது அழுக்காகவே இருப்பது, உணவையும் சுத்தமில்லாமல் வைப்பது என்று ரவிசங்கர் விரதம் கொண்டிருந்தார். செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அதைச் சரிக்கட்டிக்கொள்ளுவதற்கு வருமானமே இல்லை. ஆகையால், பம்பாயில் நான்கு, ஐந்து மாதங்களுக்குமேல் காலம் தள்ள என்னால் முடியவில்லை. இப்படித்தான் நான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். பாரிஸ்டர் தொழில், கொஞ்ச அறிவும் அதிக ஆடம்பரமும் உடைய மோசமான தொழில் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு இருந்த பொறுப்பை எண்ணி, பெரிதும் கவலைக்கு உள்ளானேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement