Load Image
Advertisement

பிரிட்டோரியாவில் முதல் நாள்

தாதா அப்துல்லாவின் அட்டர்னியிடமிருந்து யாராவது என்னைச் சந்திக்கப் பிரிட்டோரியா ஸ்டேஷனுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். குறிப்பாக இந்தியர் எவருடைய வீட்டிலும் தங்கப் போவதில்லை என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன். ஆகையால், என்னைச் சந்திக்க இந்தியர் எவருமே ஸ்டேஷனுக்கு வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அட்டர்னியும் யாரையும் அனுப்பவில்லை. நான் அங்கே போய்ச் சேர்ந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், அன்று யாரையும் அனுப்ப அவருக்கு சௌகரியப்படவில்லை என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனேன். எந்த ஹோட்டலிலும் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று நான் பயந்ததால் எங்கே போவது என்று புரியாமல் விழித்தேன். பிரிட்டோரியா ஸ்டேஷன் 1914-ல் இருந்ததற்கும் 1893 இல் இருந்ததற்கும் அதிக வித்தியாசம் உண்டு. அப்பொழுது விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. பிரயாணிகளும் மிகச் சிலரே மற்றப் பிரயாணிகளெல்லாம் போகட்டும் என்று காத்திருந்தேன். டிக்கெட் வNலிப்பவர் ( டிக்கெட் கலெக்டர் ) ஓய்வாக இருக்கும் போது அவரிடம் என் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, ஏதாவது ஒரு சிறு ஹோட்டலுக்காவது, நான் தங்கக்கூடிய வேறு இடத்திற்காவது வழி சொல்லும்படி கேட்கலாம் என்று இருந்தேன் அப்படி இல்லையென்றால், இரவு ஸ்டேஷனிலேயே இருந்து விடுவது என்றும் நினைத்தேன். ஆனால், உண்மையில் இதைக் கேட்பதற்குக்கூட எனக்குப் பயமாக இருந்தது. அவர் எங்கே என்னை அவமதித்து, விடுவாரோ ? என்று அஞ்சினேன். ஸ்டேஷனிலிருந்து எல்லாப் பிரயாணிகளும் போய்விட்டார்கள். நான் டிக்கெட் கலெக்டரிடம் என் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மரியாதையாகவே பதில் சொன்னார் என்றாலும் அவரால் எனக்கு அதிகமாக எந்த உதவியும் ஏற்படாது என்று கண்டேன். ஆனால் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஓர் அமெரிக்க நீக்கிரோவரும் பேச்சில் எங்களுடன் கலந்த கொண்டார். நீங்கள் இந்த இடத்திற்கு முற்றும் புதியவர் என்றும், உங்களுக்கு நண்பர்கள் இங்கே யாரும் இல்லை என்றும் தெரிகிறது. நீங்கள் என்னுடன் வந்தால் உங்களை ஒரு சிறு ஹோட்டலுக்கு இட்டுச் செல்கிறேன். அந்த ஹோட்டலின் சொந்தக்காரர் ஓர் அமெரிக்கர், எனக்கு நன்றாக தெரி;ந்தவர். அவர் உங்களை ஏற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன் என்றார் அவர். எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் அவருக்கு நன்றி கூறிவிட்டு, அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன். என்னை அவர் ஜான்ஸ்டனின் குடும்ப ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீ ஜான்ஸ்டனைத் தனியாக அழைத்துப் பேசினார். அவரும் அன்றிரவு தங்குவதற்கு இடம் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அன்றிரவுச் சாப்பாட்டைத் தனியாக என் அறையிலேயே சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை. எனக்கு நிறத் துவேஷம் எதுவுமே கிடையாது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், என் ஹோட்டலுக்கு வருபவர்களெல்லோரும் ஐரோப்பியர். போஜன அறையில் சாப்பிட உங்களை நான் அனுமதித்தால் அவர்கள் கோபமடைவார்கள். அவர்கள் இங்கிருந்த போய்விட்டாலும் போய்விடக்கூடும் என்றார் ஸ்ரீ ஜான்ஸ்டன். அதற்கு நான், இன்றிரவுக்கு மாத்திரம் எனக்கு இடம் அளிப்பதாக இருந்தாலும் அதற்காக என் நன்றி இங்குள்ள நிலைமையை நான் இப்பொழுது அநேகமாகத் தெரிந்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் அறிகிறேன். என் அறையிலேயே எனக்கு நீங்கள் இரவுச் சாப்பாடு கொடுப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நாளைக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினேன். பிறகு அவர் என்னை ஓர் அறைக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார். சாப்பாடு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தனியாக இருந்ததால் சிந்தனையில் ஆழ்ந்தேன். அந்த ஹோட்டலில் தங்கியவர்கள் அப்பொழுது அதிகம் பேர் இல்லை. ஆகவே, வேலைக்காரன் சீக்கிரமாகவே சாப்பாடு கொண்டு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஸ்ரீ ஜான்ஸ்டனே அங்கே வந்தார். உங்கள் அறையிலேயே நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்று உங்களிடம் சொன்னது எனக்கே வெட்கமாக இருந்தது. ஆகவே, உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொன்னேன். சாப்பாட்டு அறைக்கே நீங்களும் வந்து சாப்பிடுவதில் அவர்களுக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டா ? என்று அவர்களைக் கேட்டேன். தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை என்றும் நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்குவதைக் குறித்தும் தங்களுக்குக் கவலையில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆகையால், தயவு செய்து சாப்பாட்டு அறைக்கே வாருங்கள். உங்களுக்கு இஷ்டம் இருக்கும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என்றும் அவர் கூறினார். அவருக்கு மீண்டும் நன்றி கூறினேன். சாப்பாட்டு அறைக்குப் போய்த் திருப்தியாகச் சாப்பிட்டேன். மறுநாள் காலை அட்டர்னி ஸ்ரீ ஏ. டபிள்யு. பேக்கரைப் போய்ப் பார்த்தேன். அவரைப்பற்றிய சில விவரங்களை அப்துல்லா சேத் என்னிடம் சொல்லியிருந்தார். ஆகையால் அவர் என்னை அன்போடு வரவேற்றதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. என் சுகத்தைக் குறித்தும் பிரியமாக விசாரித்தார் என்னைப் பற்றி எல்லா விவரங்களையும் சொன்னேன். அதன் பேரில் அவர் கூறியதாவது. இந்த வழக்குக்குச் சிறந்த வக்கீலை அமர்த்தியிருக்கிறோம். ஆகையால், பாரிஸ்டர் என்ற வகையில் உங்களுக்கு எங்களிடம் வேலையில்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வருவதோடு மிகவும் சிக்கலானதும் கூட அவசியமான தகவல்களைப் பெறும் அளவுக்கு மாத்திரம் உங்கள் உதவியை ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னுடைய கட்சிக்காரரிடமிருந்து வேண்டிய விவரங்களையெல்லாம் உங்கள் மூலமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமாகையால் அவருடன் நான் வைத்துக் கொள்ள வேண்டிய தொடர்பை நீங்கள் எளிதாக்கிவிட்டீர்கள். இது நிச்சயமாக வசதியானதே. நீங்கள் தங்குவதற்கு நான் இன்னும் இடம் பார்க்கவில்லை. உங்களைப் பார்த்த பிறகு ஏற்பாடு செய்வது நல்லது என்ற இருந்துவிட்டேன். இங்கே பயப்படக்கூடிய வகையில் நிறத்துவேஷம் இருந்து வருகிறது. ஆகையால், உங்களைப் போன்றவர்கள் தங்குவதற்கு இடம் பார்ப்பதென்பது சுலபமல்ல. ஆனால், எனக்கு ஒர் ஏழைப் பெண்ணைத் தெரியும். அவள் ஒரு ரொட்டிக்கடைக்காரரின் மனைவி அம்மாது உங்களுக்கு இடம் கொடுப்பாள் என்று நினைக்கிறேன். அதனால் அவளுக்கும் வருவாய் இருக்கும். வாருங்கள், அவள் இருக்கும் இடத்திற்குப் போவோம். அப் பெண்மணியின் வீட்டிற்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். என்னைக் குறித்து தனியாக அவரிடம் பேசினார். வாரத்திற்கு 35 ஷில்லிங் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு, நான் அங்கே தங்குவதற்கு அப்பெண் சம்மதித்தார். ஸ்ரீ பேக்கர், அட்டர்னித் தொழில் செய்து வந்ததோடு மத சம்பந்தமான பிரசங்கங்களும் செய்து வந்தார். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். இப்போது சட்டத் தொழிலை விட்டு விட்டு மதப்பிரசாரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல சொத்து உண்டு. இப்பொழுதும் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார். எழுதும் கடிதங்களிலெல்லாம் ஒரே விஷயத்தையே எழுதிக்கொண்டு வருகிறார். எந்த வகையில் கவனித்தாலும் கிறிஸ்தவ சமயம் ஒன்றே எல்லாவற்றிலும் சிறந்தது என்கிறார். ஏசுநாதர் ஒருவரையே கடவுளின் திருக்குமாரர் அவரே மனித வர்க்கத்தின் ரட்ஷகர் என்பதை ஒப்புக்கொள்ளா வரையில் நிரந்தரமான சாந்தியை அடையவே முடியாது என்று வாதிக்கிறார். ஸ்ரீ பேக்கரை நான் முதல் முறை சந்தித்துப் பேசியபோதே மத சம்பந்தமான என்னுடைய கருத்துக்களைப்பற்றி அவர் விசாரித்தார். நான் அவருக்கு பின்வருமாறு சொன்னேன். பிறவியினால் நான் ஹிந்து என்றாலும் ஹிந்து தருமத்தைப் பற்றி எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியாது. மற்ற மதங்களைக் குறித்துத் தெரிந்திருப்பதோ அதைவிடவும் குறைவு. உண்மையில் மத சம்பந்தமாக என் நிலை என்ன ? என் நம்பிக்கை எதுவாக இருக்க வேண்டும் ? என்பதையே நான் அறிவேன். என் சொந்த மதத்தைக் குறித்துக் கவனமாகப் படிக்க விரும்புகிறேன். முடிந்த வரையில் பிற சமயங்களைக் குறித்தும் படிக்க எண்ணுகிறேன். இதையெல்லாம் நான் சொல்லக் கேட்டு ஸ்ரீ பேக்கர் சந்தோஷமடைந்தார். அவர் கூறியதாவது, தென்னாப்பிரிக்கப் பொதுக் கிறிஸ்தவ பிரசார சபையில் நானும் ஒரு டைரக்டர். என் சொந்த செலவில் ஒரு கிறிஸ்தவாலயம் கட்டியிருக்கிறேன். தவறாமல் அதில் சமயப் பிரசங்கங்கள் செய்து வருகிறேன். நிறத்து வேஷம் என்பதே என்னிடம் இல்லை. எனக்குச் சக ஊழியர் சிலர் இருக்கின்றனர். தினம் பகல் ஒரு மணிக்கு நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். அதில் நீங்களும் கலந்து கொள்வீர்களாயின் மகிழ்ச்சியடைவேன். என் சக ஊழியர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். உங்களைச் சந்திப்பதில் அவர்கள் ஆனந்தமடைவார்கள். அவர்களுடன் பழகுவதை நீங்களும் விரும்புவீர்கள் என்று தைரியமாகக் கூறுவேன். அதோடு நீங்கள் படிப்பதற்குச் சமய நூல்களிலெல்லாம் தலையாய நூல் பைபிளேயாகையால் முக்கியமாக நீங்கள் அதைப் படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். ஸ்ரீ பேக்கருக்கு நன்றி கூறினேன். ஒரு மணிக்கு நடக்கும் பிரார்த்தனைக்குச் சாத்தியமானவரை ஒழுங்காக வருவதாகவும் ஒப்புக்கொண்டேன். அப்படியானால், நாளை, பகல் ஒரு மணிக்கு உங்களை இங்கே எதிர்ப்பார்க்கிறேன். பிராரத்தனைக்கு நாம் இருவருமே சேர்ந்து போவோம் என்றார். பிறகு விடை பெற்றுக் கொண்டு பிரிந்தோம். இந்தப் பேச்சைப்பற்றித் திரும்பச் சிந்தித்துப் பார்க்க எனக்கு அப்பொழுது அவகாசம் இல்லை. ஸ்ரீ ஜான்ஸ்டனின் ஹோட்டலுக்குச் சென்றேன். அவருக்குக் கொடுக்க வேண்டியிருந்ததைக் கொடுத்துவிட்டு, வசிப்பதற்குப் புதிதாக அமர்த்தியிருந்த இடத்திற்குச் சென்று, அங்கேயே என் மத்தியான ஆகாரத்தையும் சாப்பிட்டேன். அவ் வீட்டு அம்மாள் நல்ல பெண்மணி எனக்காக அவர் சைவ உணவு சமைத்திருந்தார். வெகு சீக்கிரத்திலேயே அக் குடும்பத்தில் நானும் ஒருவன் ஆகிவிட்டேன். தாதா அப்துல்லா ஒரு நண்பருக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அடுத்தபடியாக அவரைப் பார்க்கச் சென்றேன். தென் ஆப்ரிக்காவில் இந்தியருக்கு இருந்த கஷ்டங்களைக் குறித்து, இன்னும் அதிகமான விவரங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். தம்முடனேயே தங்கும்படி அவர் என்னை வற்புறுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி கூறிவிட்டுத் தங்குவதற்கு வேறு ஏற்பாடுகளைச் செய்து விட்டதாகச் சொன்னேன். எனக்கு ஏதாவது தேவை இருந்தால் அதைக் கேட்கத் தயங்க வேண்டாம் என்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார். இதற்குள் இருட்டிவிட்டது. வீட்டுக்குச் சென்று சாப்பிட்டேன். என் அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானேன். உடனே செய்தாக வேண்டிய வேலை எதுவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி அப்துல்லா சேத்துக்கு அறிவித்தேன். என்னிடம் ஸ்ரீ பேக்கர் கொண்டிருக்கும் சிரத்தையின் பொருள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். அவருடைய சகாக்களினால் நான் அடையப்போகும் லாபம் என்ன ? கிறிஸ்தவ சமய ஆராய்ச்சியை நான் எந்த அளவுக்கு மேற்கொள்ளுவது ? ஹிந்து சமயத்தைப்பற்றிய நூல்களைப் பெறுவது எப்படி ? என்னுடைய மதத்தைப்பற்றி முற்றும் தெரிந்து கொள்ளாமல் கிறிஸ்தவத்தைச் சரியான வகையில் நாள் எவ்விதம் புரிந்துகொள்ள முடியும் ? ஒரே ஒரு முடிவுக்கே நான் வர முடிந்தது, எனக்குக் கிடைப்பதை எல்லாம் விருப்பு வெறுப்பின்றி நான் படிக்க வேண்டும். கடவுள் காட்டும் வழியை அனுசரித்து, ஸ்ரீ பேக்கரின் கோஷ்டியினருடன் பழக வேண்டும். என் மதத்தைப்பற்றி முற்றும் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால், மற்றொரு மதத்தில் சேருவதைப்பற்றி நான் எண்ணவும் கூடாது. இவ்விதம் சிந்தித்தவாறே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement