Load Image
Advertisement

ஐயப்பன் கோயில் பூஜாரிகள்

கேரள கோயில்கள், தமிழகத்தைப் போல் அல்லாமல், அமைப்பிலும், பூஜை முறையிலும் மாறுபட்டுள்ளன. சில கோயில்கள் ஓடு வீடுகள் போன்று காட்சி தரும். மேல்சாந்தி எனப்படும் தலைமை பூஜாரி மட்டுமே கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். கீழ்சாந்திகள் எனப்படும் மற்ற பூஜாரிகள் கருவறைக்கு வெளியேதான் நிற்க முடியும். அதேநேரம், சபரிமலை கோயிலில், ஐயப்பனின் பூரண அருள்பெற்ற பெரும் பாக்கியசாலியான ஒருவரே மேல்சாந்தியாக பொறுப்பேற்க முடியும். மேல்சாந்தி பதவிக்கு தகுதி உடையவர்களை விண்ணப்பிக்கும்படி, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவிப்பு வெளியிடும். இந்த விண்ணப்பங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, தகுதி உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உதாரணத்துக்கு பத்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் ஐயப்பன் சந்நிதானத்தில் தேர்ந்தெடுப்பர். பத்துபேரின் பெயர்களும் தனித்தனியாக சீட்டுகளில் எழுதப்படும். இவை ஒரு குடத்தில் போடப்படும். மற்றொரு குடத்தில் மேல்சாந்தி என எழுதப்பட்ட ஒரு சீட்டும், எதுவுமே எழுதாத ஒன்பது சீட்டுகளும் போடப்படும். ஒரு குழந்தையை அழைத்து முதல் குடத்திலிருந்து ஒரு சீட்டை எடுப்பார்கள். இதே போல அடுத்த குடத்திலிருந்தும் சீட்டு எடுக்கப்படும். இரண்டாவது குடத்திலிருந்து எடுக்கப்பட்ட சீட்டு வெற்று சீட்டாக இருந்தால் அவர் குலுக்கலில் இருந்து கழிக்கப்படுவார். இப்படி வரிசையாக சீட்டுகள் எடுக்கப்படும். எந்த பெயருடையவரின் சீட்டும், இன்னொரு குடத்திலுள்ள மேல்சாந்தி என எழுதப்பட்ட சீட்டும் சேர்ந்து வருகிறதோ, அவரே மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இப்படி கடினமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவரே ஐயப்பனுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தைப் பெறுவார். அது மட்டுமல்ல. இவருடைய பதவிக்காலமும் ஒரு ஆண்டுதான். அடுத்த ஆண்டு புதிய பூஜாரி தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பூஜாரிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும். இவர் ஒரு ஆண்டு காலம் (நடை அடைக்கப்பட்டுள்ள காலம் உட்பட) சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும். அவரது வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் நடந்தால்கூட போகக்கூடாது. ஐயப்பனின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருப்பவர், தன் தலைமுறைக்கே வேண்டிய சொத்தை சேர்த்துவிடுவார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அந்த அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி முதல் தேதி இந்த குலுக்கல் நடக்கும். கார்த்திகை முதல் தேதி புதிய பூஜாரி நடையைத் திறப்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement