Load Image
Advertisement

முருகனின் சகோதரி

முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல், ஜோதி எனும் அக்னியாகவே அழைக்கப்படுகிறது. புராணத்தில் கூறியுள்ளதுபோல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகிய ஞானத்தில் பிறந்தவர்தான் கார்த்திகேயன் எனும் ஆண் பால் அக்னி. கார்த்திகை எனும் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ஆனார். இதேபோன்று பார்வதிதேவியான சக்தியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்டவள்தான் கார்த்திகாயினி எனும் பெண் பால் அக்னி. கார்த்திகாயினி எப்போதும் தன் சகோதரனுடன் இருக்கவேண்டி, தன் தாய் சக்தியால் சக்தியூட்டப்பட்ட வேலாக மாற்றப்பட்டு கார்த்திகேயனின் கையில் கொடுக்கப்பட்டாள். தை மாத பூச நட்சத்திர நாளில் முருகன் கையில் வேலாகக் கொடுக்கப்பட்டதால் இவள் பெயர் பூஷாணா என்றும், வடமொழியில் வேல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. தைப்பூச நாளை அக்னியின் நாள் என்றே கூறுகின்றனர். பூசம் (புஷ்யம்)என்ற சொல்லுக்கு சக்தியூட்டுதல் என்ற பொருளுண்டு. பூச நட்சத்திர நன்னாளில், அக்னியான சக்தி தன் மகளான கார்த்திகாயினியை தன் குமாரன் கையில் கொடுத்து அசுரனான சூரபத்மனை வதம் செய்தார். சூரபத்மன், சந்திர குடும்பத்தைச் சார்ந்த மதியைப் பாதிக்கக்கூடியவன் என்றும், இவன் பொறாமை, கோபம், காமம், இச்சைகளைக் கொடுக்கும் மதிகேடன் என்றும், வேதவியாசர் எழுதிய ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தைப்பூச நன்னாளில், மக்களும் தங்கள் மனங்களிலுள்ள பொறாமை, கோபம், காமம், இச்சைகளைக் களைந்து, அக்னி எனும் வேலின் துணையுடன் முருகனின் அருளால் காக்கப்படுகின்றனர். இங்கே அக்னி வேலாக இருந்து மக்களைக் காக்கின்றது. இங்கே அக்னியான சகோதரி, தன் சகோதரனின் கையால் தாங்கப்படுகின்றாள். குடும்பத்தில் பெண் ஆகிய சகோதரியை சகோதரன் தன் கைகளால் வாழ்நாள் முழுவதும் தாங்கவேண்டும் என்பதே வாழ்வியல் தத்துவமாக முருகன் கை வேல் உணர்த்துகின்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement