Load Image
Advertisement

மகாகவி காளிதாஸ்

காளியைத் திட்டிய கவிஞன்: காளியைத் திட்டும் தைரியம் யாருக்காவது உண்டா? சுட்டெரித்து விடமாட்டாளா என்று சந்தேகம் வரும். ஆனால், அவளையும் திட்டித் தீர்த்தார். மகாகவி காளிதாஸ். காளிதேவி, தன் அருளால் காளிதாசரை மாபெரும் கவிஞராக்கினாள். அவர் போஜராஜனின் அரசவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற கவிஞர்களும் இருந்தனர். மூவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டனாக கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம், இம்மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. இதுபோன்ற சமயங்களில், தெய்வசந்நிதியில் தீர்ப்பு கேட்பது ராஜாக்களின் வழக்கம். போஜராஜனும் காளி சந்நதிக்கு வந்தான். தண்டியிடம் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் காளியின் குரல் அசரிரீயாகக் கேட்டது. காளிதாசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்படியானால் என் திறமை என்னடி? என்று ஒருமையில் கோபமாகத் திட்டிவிட்டார். ஆனால், காளி அவரைப் பற்றியும் சொல்ல இருந்தாள். அதற்குள் காளிதாசர் அவசரப்பட்டு விட்டார். மகனே காளிதாசா! அவசரக்குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன். த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம்? என்றதும், காளிதாசர் அழுதே விட்டார். ஏன் அழுதார் தெரியுமா? அந்த ஸ்லோகத்தின் பொருள் தெரிந்தால், காளியின் கருணையைப் பார்த்து நீங்களும் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவீர்கள். நீதானே நான் நீதானே நான் நீதானே நான் என்பதே அதன் பொருள். நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சியபுலவனேது என்றாள் காளி. அந்தக் கருணைக்கடலில் விஜயதசமியன்று உங்கள் கோரிக்கையை வையுங்கள். வெற்றி உங்களுக்கே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement