திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் முருகன் மலைக்கோவிலில் புதுமண தம்பதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். மலைக்கோவில் அடிவாரத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொது வழியில் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. முருகன் மலைக்கோவிலில் 20 திருமணங்களும், திருத்தணி நகரத்தில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றன.