மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: கார்த்திகை தீபம் என்பது ஹிந்து பாரம்பரியத்தில் பழமையான, புனிதமான பண்டிகைகளில் ஒன்று. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தின் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. முருகன், சிவபெருமான் கோயில்களில் விழாக்கள் நடைபெறும். அந்தந்த தீபத்துாண் அல்லது மலை உச்சியிலுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிச.3 ல் நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றத்தின் 1996 உத்தரவின் அடிப்படையில் டிச.3 ல் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள (தர்காவிலிருந்து 15 மீ.,தொலைவில்) தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. இது 1920 ல் பிரிவி கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பழமையான தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பழமையான தீபத்துாணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்கள் மத சடங்குகளை செய்வதை தடுக்கும் நோக்கத்தை குறிக்கிறது. அம்முடிவு சட்ட விரோதமானது. ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்: தர்காவிலிருந்து தீபத்துாண் 60 மீ.,அப்பால் அமைந்துள்ளது. அங்கு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அரசு தரப்பு: கோயில் நிர்வாகம் அனுமதித்தால் பாதுகாப்பு அளிக்கத் தயார். நீதிபதி: தீபத்துாணில் தீபம் ஏற்றினால் என்ன, தேர்தல் வருவதால் யாருக்கும் பயந்து அங்கு ஏற்றாமல் உள்ளனரா. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.19 க்கு ஒத்திவைத்தார்.