பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 50ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் லட்சார்ச்சனை கமிட்டி சார்பில் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் பரமசுவாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு லட்சார்ச்சனை துவங்கியது. அப்போது பெருமாளுக்கு துளசி மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. இரவு 8:00 மணிக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் இரவு 9:00 மணிக்கு கைசிக ஏகாதசியையொட்டி கைசிக்க புராணம் வாசிக்கப்பட்டது. இதன்படி வராக அவதாரத்தின் போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன் வரும் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசியாகும். ஏராளமான பக்தர்கள் புராணத்தை கேட்டனர்.