மறைமலை நகர்; திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோவில் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில், பழமையான மருந்தீஸ்வரர் – இருள் நீக்கி தாயார் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அன்று மாலை மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், தீபம் ஏற்றப்படும். அந்த வகையில், நாளை தீபம் ஏற்றுவதற்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹா தீபத்திற்குத் தேவையான 3,500 மீட்டர் நீளமுடைய திரி தயாரிக்கும் பணிகளில், சிவனடியார்கள் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் சார்பில் மூன்று நாட்கள் விளக்கேற்ற, 600 லிட்டர் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திற்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மற்றும் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். அவர்களின் வசதிக்காக மறைமலை நகர் நகராட்சி சார்பில் குடிநீர், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மாலை 6:00 மணிக்கு, மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.