கோதண்ட ராமஸ்வாமி மடாலயத்தில் மார்கழி சிறப்பு வழிபாடு

டிசம்பர் 27,2018



கோவை: கோவை, உப்பார வீதியில் உள்ள கோதண்ட ராமஸ்வாமி பஜனை மடாலயத்தில், நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தையொட்டி ஆண்டாள் அருளிய, திருப்பாவையின், 13வது பாடலை பக்தர்கள் பாராயணம் செய்தும், பாடலாக பாடியும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.திருமணமாகாத இளம்பெண்களுக்கு திருமணமாகும் வரத்தையும் வம்சவிருத்தியாகாதோருக்கு புத்திரபாக்யத்தையும் தந்தருள்கிறார், கோதண்டராம சுவாமி. இக்கோவிலில் நடைபெறும் ஸ்ரீராமநவமி, புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை, கூடாரைவெல்லும் சீர்கோவிந்தா பாசுரத்துக்கு அடுத்த நாள் ஆகிய மூன்று நாட்களிலும் சுவாமிக்கு திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெறும்.

அப்போது சுவாமிக்கு தேங்காய் உருட்டும் வைபவத்தில், திருமணமாகாத பெண்கள், தேங்காய் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு செய்து, வாரணமாயிரம் என்று துவங்கும் பாடலை பத்து முறை பாடி பூஜித்த தேங்காயை பெற்று வீட்டில் வழிபாடு செய்தால், அடுத்த திருக்கல்யாண மஹோற்சவத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதனால், திரளான பெண்கள் வழிபாடு செய்கின்றனர்.மார்கழியையொட்டி, இக்கோவிலில் நாளை, காலை, 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின், புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை… என்று துவங்கும் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.பாடலின் பொருள்கிருஷ்ண அவதாரத்தில், பறவை உருவத்தில் தன்னை கொல்ல வந்த பகாசுரனுடைய வாயைப்பிளந்து கொன்றான் கண்ணன். ராமஅவதாரத்தில் தனக்கு தீங்கு செய்த ராவணனின் பத்து தலைகளை கிள்ளி எரிந்து குலநாசம் செய்தான் ராமபிரான்.அத்தகைய வீரம் கொண்ட எம்பெருமானின் பெருமையை பாட பெரியவர், சிறியவர் எனக்கூடியுள்ளோம். கிழக்கே வெள்ளி உதித்து, மேற்கே வியாழன் மறைந்தது. கூட்டை விட்டுப் பறவைகள் ஆரவாரத்தோடு இரை தேடப்புறப்பட்டு விட்டன.தாமரை மலர் போன்ற அழகை உடையவளே, நீ தனியாக கண்ணனை நினைத்து ஏங்க வேண்டாம், எங்களோடு வந்து குளிர்ந்த நீரில் கும்மாளமிட்டு விளையாடுவாய் வா! இன்னும் ஏன் உறங்குகிறாய் என்றனர் பெண்கள் என்பதே இப்பாடலின் பொருள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்