பதிவு செய்த நாள்
09
ஆக
2021
04:08
நரிக்குடி: நரிக்குடி புளியங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை 38. இரு தினங்களுக்கு முன் தனது வயலை டிராக்டரால் உழுதார். அன்றைய தினம் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மறுநாள் விவசாய பணிக்காக வயலுக்குச் சென்ற போது, புதைந்து கிடந்த சாமி சிலைகள் வெளியில் தெரிந்தன. போலீசார், தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தொல்லியல் துறையினர் இது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சிலைகள் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்மாவாசை நாளன்று தெய்வங்களின் சிலைகள் கிடைத்ததால், கிராமத்திற்கு கிடைத்த புண்ணியமாக நினைத்து மாலை அணிவித்து, பாலாபிஷேகம், பூஜைகள் செய்து, கிராமத்தினர் வழிபட்டனர். இச்செய்தி அப்பகுதியில் பரவியதால் ஏராளமானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நிதி குமார் சிலைகளை கைப்பற்ற சென்றபோது கிராமத்தினர் தடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டரிடம் பேசி சிலைகளை உங்களிடம் ஒப்படைக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, சிலைகளை எடுக்க சம்மதித்தனர். தற்போது திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு பாத்தியப்பட்ட சிலைகளை எங்கள் கிராமத்தில் கிடைத்த சிலைகளை நாங்கள் வழிபட எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என அக்கிராமத்தினர் தெரிவித்தனர்.