பதிவு செய்த நாள்
06
ஜன
2020
11:01
தஞ்சாவூர், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு, மங்களாம்பிகை அம்மன் வீதியுலா செல்வதற்காக, ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய இந்திர விமானம் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மங்களாம்பிகையம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக விழாவிற்கான முக்கிய தலமாகும். இக்கோவிலில் மாசிமக விழாவின் முதல் நாள் இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் தனித்தனியாக வீதியுலா நடைபெறும். இதற்காக மண்டகப்படி உபயதார்கள் மூலம், கடந்தாண்டு ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு, புதியதாக இந்திர விமானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மங்களாம்பிகை அம்மன் வீதியுலா செல்வதற்காக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் செம்பு மற்றும் தங்க மூலாம் பூடப்பட்ட, சுமார் 9 அடி உயரத்தில் ஐந்தரை அடி அகலத்தில், புதிதாக இந்திர விமானத்தை தற்போது உபயதார்கள் வழங்கினர். வழங்கப்பட்ட இந்திர விமானத்தின் வெள்ளோட்டம் நேற்று கும்பேஸ்வரர் கோவில் தேரோடும் வீதியில் நடைபெற்றது. இதில் பக்தர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.