Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை கந்த சஷ்டி பாராயணம்: 2 கோடி பேர் ... ஆடி வெள்ளி: தொண்டாமுத்தூர் அம்மன் கோவில்களில் கோலாகலம் ஆடி வெள்ளி: தொண்டாமுத்தூர் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கருட பஞ்சமி : கருடன் பிறந்த தினம்
எழுத்தின் அளவு:
இன்று கருட பஞ்சமி : கருடன் பிறந்த தினம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
02:07

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு  மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை  அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து  நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.  போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன்  கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது  அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக்  கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன்,  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.  தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன்  வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும்  ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று  அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.  கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம்  இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு  பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள்  செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று  அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக  எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை  செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய்  கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை,  பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை  செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற  வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால்,  பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும்  இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப்  பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு  பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும்.  சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும்  பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு  அழைப்பு விடுத்தாள். அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம்  தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்... என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...  என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு  அடிமையாக வேண்டும்... என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில்  கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்... என, உத்தரவு போட்டாள். பாம்புகளும்  அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை  செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே... என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச்  சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?  என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள  அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்... என்றாள்.  கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத்  தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து,  இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக்  கேட்கிறேன்... என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின்  வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம்  வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும்,  கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி  திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட  ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.

பன்னெடுங்காலமாகவே கருட உபாஸனை பாரத பூமி எங்கும் சிறந்து விளங்கி வந்திருப்பதைப் பண்டைய நூல்களும் சரித்திரச்  சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. கருட பகவானின் பெருமைகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருட புராணம்  விரிவாகக் கூறுகிறது. கருட உபாசனை புரிவதில் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம்  திருமாலின் அருள் கிடைக்கிறது. கருடன் திருமாலின் மெய்த் தொண்டர் என்று கூறப்படுபவர். விஷ்ணு பக்தர்கள் கருடோபாஸனையின்  மூலம் தாம் திருமாலின் தொண்டருக்கும் தொண்டர் என்பதை நிரூபிக்கின்றனர். வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி  சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது.  அக்கருட மூர்த்தியை  வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின்  பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது.  இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது.   கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர்.

கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது  இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக்  காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய  வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில்  திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி  காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது என்று வசந்தராஜ சகுன விஸ்தரம் என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருட  தரிசனத்தை விடக் கருடத்வனி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் ததோபித்வனி ருச்யதே என்பது பெரியோர் வாக்கு.  பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருடத்வனியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும்  கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும். கருட  தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள். கருடத்வனி கேட்கும்போது  மங்களானி பவந்து என்று சொல்வதும், கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ  நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலுார்; கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar