திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை தங்க தாமரை மலர்களால் வழிபட்டு வந்தார். ஒருநாள் பெருமாள் முன் மண் மலர்கள் சிதறிக் கிடக்க கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார். ‘‘குருவ கிராமத்தில் இருக்கும் பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன் மண் மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்வான். அவனுடைய பக்தியை உலகறியச் செய்யவே மண் மலர்களை ஏற்று அருள்புரிந்தேன்’’ என அசரீரி கேட்டது. இதன் மூலம் பக்திக்கு பணம் தேவையில்லை என்பதை உணர்ந்தார் சக்கரவர்த்தி.