Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மோகினி அலங்காரத்தில் கோமதி அம்மன் ... மவுனகுரு சுவாமி கோயிலில் பாலாபிஷேகத்துடன் நடந்த குருபூஜை மவுனகுரு சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதியை வேண்டினால் புதிய வாழ்க்கை கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பார்வதியை வேண்டினால் புதிய வாழ்க்கை கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

22 அக்
2020
10:10

 நவராத்திரி ஏழாம் நாள் : பூஜை நேரம் :மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை

மனித வாழ்வில், திருமணம் ஒரு முக்கிய நிகழ்வு என்பதையும் கடந்து, இல்லறம் என்ற சொல், தர்மத்தைக் குறிக்கிறது. மனைவியை தர்மபத்னி என்று சொல்வதையும் காண வேண்டும். தான தர்மங்களை வைதிக நெறிப்படி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதே, திருமணத்தின் நோக்கம். இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் கூறுவர். இன்னாருக்கு இன்னார் தான் மனைவி, இன்னார் தான் கணவன் என்பது, இறையருளால் அமைவதையே இது குறிப்பிடுகிறது.சிலருக்கு விரும்பியபடி வாழ்க்கைத் துணை கிடைக்கிறது; சிலருக்கு, யதார்த்தமாகவே நல்ல வாழ்க்கை அமைகிறது; சிலர் தாமாகவே துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நிகழ்வையும் காண முடிகிறது. இப்படி, எத்தனையோ விதமாக முடிவாகும் திருமணங்கள், நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே, வாழ்நாள் வெற்றி என, அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். விதி வசத்தாலும், பரஸ்பரம் புரிந்துணர்வு இல்லாமையாலும், ஒரு சிலரின் வாழ்க்கை தோல்வியடைகிறதே தவிர, பரம்பரை கலாசாரத்தைக் காக்க வேண்டியும், கிடைத்த வாழ்க்கையை
இன்பமானதாக மாற்றிக் கொள்ளவும், தம்பதியராக கோவிலுக்குச் சென்று வழிபடும் நெறியை, நம் ஹிந்து மதம் வகுத்துள்ளது.

விரும்பத் தகாத அல்லது பொருத்தமில்லாத கணவனோ அல்லது மனைவியோ பெரியவர்களின் வற்புறுத்தலாலோ, வாக்குக் கொடுத்ததாலோ அல்லது சூழலிலோ வாழ்க்கைத் துணையாக அமையும் போது, இக்காலத்து இளைஞர்களும், பெண்களும் செய்வதறியாது சோர்ந்து விடுகின்றனர்; சிலர் கலாசாரத்தை மீறி பிரிந்தும் விடுகின்றனர். தெய்வத்தின் திருவருளால், எதையும் நமக்கு இன்பமானதாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்பதையும், நம் புராணங்கள் அதற்கு வழிகாட்டுகின்றன என்பதையும், சிறுவயது முதலே பயிற்றுவிக்காததால் தான், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு மணம் நடந்தும், வாழத் தெரியாமல், சிலர் துன்பமே வாழ்க்கையாக வாழ்கின்றனர்.சர்யாதா என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அறிவிலும், அழகிலும் சிறந்த, சுகன்யா என்று ஒரு பெண்ணிருந்தாள். அவள் இளம் வயது முதலே, பண்பாட்டுடன் வளர்க்கப்பட்டதாலும், இயல்பாகவே இனிய சுபாவமுடையவள் ஆகையாலும், எல்லாராலும் வணங்கப்படும் அரசிளங்குமரியாக விளங்கினாள்.ஒரு சமயம், தன் தோழியருடன் காட்டிற்கு விளையாடச் சென்றாள். அங்கு, பெரிய கரையான் புற்று ஒன்று இருந்தது. அதைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த போது, புற்றின் மீது சுகன்யாவின் கவனம் சென்றது. அதை உற்று நோக்கினாள்; அதில் இரு துவாரங்கள் இருப்பதையும், அதன் வழி உள்ளே ஏதோ பளிச்சிடுவதையும் கண்ட அரசிளங்குமரி, ஒரு குச்சியை எடுத்து, அத்துவாரத்தில் குத்தி விட்டாள். ஒன்றும் தெரியாததால், மறு துவாரத்திலும் அவ்வாறே குத்தி விட்டாள்; அப்போதும் ஒன்றும் தெரியவில்லை. அதை விட்டு, விளையாட்டையும் முடித்து, அரண்மனை திரும்பினாள்.

அங்கு ஒரே கூட்டமாக இருந்தது; எங்கும் வலி பொறுக்க முடியாத, வேதனைச் சத்தங்கள் கேட்டன. விசாரித்த போது, சில மணி நேரமாக, எல்லாரும் சிறுநீர் கழிக்க முடியாமல், அவதிக்குள்ளாகி இருப்பதாக அறிந்தனர். உள்ளே சென்று பார்த்தால், மன்னன் உட்பட எல்லாருக்குமே, அந்த வேதனை ஏற்பட்டிருப்பதை அறிந்தனர். அரண்மனை வைத்தியர்களும் கூட, ஏதும் புரியாது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.ராஜகுரு வரவழைக்கப்பட்டார். காரணத்தையறிந்து, தக்க பரிகாரத்தை உடனே செய்யுமாறு, மன்னன் வேண்டினான். தவ வலிமை மிக்க ராஜகுரு, கண்மூடி தியானித்து, ஞானக் கண்ணால், நடந்தவற்றை அறிந்தார். காட்டில், பல ஆண்டுகளாகத் தவம் செய்து வரும்
ஸ்யவன முனிவர் தெரிந்தார். அவரைச் சுற்றி கரையான் புற்றிருப்பதையும், அறியாமல் யாரோ செய்த தவறால், அவரது கண்கள் குருடாகி விட்டதையும் அறிந்தார். தவமே வாழ்க்கையாகக் கொண்ட முனிவரின் கண்கள் குருடாக்கப்பட்டதே, அந்நாட்டு மக்களின் வேதனைக்கு காரணம் என்பதையும் அறிந்து, அவரிடமே பரிகாரம் கேட்கலாம் என மன்னனும், ராஜகுருவும், மற்றோரும் கிளம்ப, சுகன்யாவும் தன் தோழியருடன் புறப்பட்டாள்.
எல்லாரும் காட்டிற்குச் சென்றனர். புற்று இருந்த இடத்தைத் தேடி அடைந்தனர்.

அங்கு சென்றதும், சுகன்யா அதிர்ச்சி அடைந்தாள். தான் குச்சியால் குத்திய புற்றின் இரு இடங்களிலும், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடன் வந்தவர்கள், புற்றைக் கலைத்து, முனிவரை மெதுவாகத் துாக்கி நிறுத்தினர். அவரது இரு கண்களும் குருடாகியிருப்பதைக் கண்ட சர்யாதா மன்னன், கோபம் கொண்டு, இத்தவறைச் செய்தவர் யார்? என, எல்லாரையும் பார்த்து வினவினான். பயந்து நடுங்கிய அரசிளங்குமரி, தானே அக்குற்றத்தை, அறியாமல் செய்ததை, எல்லாரும் அறிய ஒப்புக் கொண்டாள்.

மன்னனும் செய்வதறியாது முனிவரை நமஸ்கரித்து, மக்களும், தானும் படும் வேதனையைக் கூறி, குற்றம் பொறுத்து, எங்களின் சங்கடத்தைத் தீருங்கள்என்றும், அதற்குப் பரிகாரமாக எதைக் கேட்டாலும் வழங்குவதாகவும் மன்றாடினான். முனிவரும் கருணை கொண்டு, எனக்கு யார் மீதும் கோபமில்லை... எல்லாம் விதி வசத்தால் நிகழ்வது. இனி, எனக்கு கண் தெரியாது; தவமும் கலைந்து விட்டது. எனக்கு உதவியாகவும், துணையாகவும் இருக்குமாறு, ஒருவரைக் கொடு போதும்... என்றார். யாரை அனுப்புவது என, மன்னன் யோசிக்கும் வேளையில், சுகன்யா முன் வந்து, நம் நாட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படக் காரணமாயிருந்த நானே, இம்முனிவரை மணந்து, நல்ல துணையாக இருக்கப் போகிறேன்... எனக்கூறி, முனிவரை நமஸ்கரித்து, மக்களின் வேதனை தீர, தம்மை ஏற்குமாறு வேண்டினாள்; முனிவரும் ஏற்க, மக்களின் சிறுநீர் கழிக்க முடியாத வேதனை, உடனே நீங்கியது.

மன்னனும், மக்களும் கலங்கினர். அழகில் ரதியையும், அறிவில் சரஸ்வதியையும் நிகராகக் கொண்ட தங்களின் அரசிளங்குமரி, ஒரு வயோதிகரை மணக்க நேரிட்டு விட்டதே என்று, வேதனையுற்று புலம்பினர். ராஜகுரு எல்லாரையும் சமாதானப்படுத்தி, நம் இளவரசி, அன்னை பராசக்தியை தினமும் ஆராதிப்பவள்; அவளுக்கு ஒரு குறையும் வராது... என்று தேற்றினார்.
செய்வதறியாது எல்லாரும், வீடு திரும்பினர்.

ஸ்யவன முனிவரும், சுகன்யாவும் காட்டில் முனிவர்கள் வாழும், வானப்ரஸ்தம் என்ற வாழ்க்கையை துவங்கினர். பண்பில் சிறந்த சுகன்யா, எந்தக் களங்கமும் இல்லாமல், கணவனை தெய்வமாக எண்ணி, பணி செய்தாள். நீராட, தவம் செய்ய, உணவு உண்ண என, எல்லாவற்றிலும் ஒரு தாயைப் போல் அம்முனிவரைப் பேணி பாதுகாத்தாள். அவளது நல்ல குணத்தையும், தாய்மை கருணையையும் அறிந்த ஸ்யவனர், சுகன்யாவிடம் அளவு கடந்த அன்பு கொண்டு, இல்லறத்தை இனிமையாக்கும், ஸ்ரீபார்வதி தேவியின் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, அம்பிகையைப் பூஜிக்கும் முறைகளையும் கூறினார்.
கள்ளம் கபடமில்லாத அரசிளங்குமரி, தன் தவறால் கண்ணிழந்த கணவருக்கு, மீண்டும் கண் தெரிய அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், அன்னையை ஆராதித்து வந்தாள்.சுகன்யாவின் பக்தியையும், கற்பு நெறியையும் கண்டு மகிழ்ந்த பார்வதி தேவி, அவளது கற்புநெறியை, உலகத்தினர் அறியும் வண்ணம், ஒரு திருவிளையாடல் நிகழ்த்தி, பின் இன்பமான வாழ்க்கையை அருள திருவுள்ளம் கொண்டு, தேவலோகத்தில் மிக அழகானவர்களாகிய அஸ்வினி தேவர்கள் என்ற இருவரை, அவர்கள் வசிப்பிடத்திற்கு அனுப்பினாள்.
தவ வாழ்க்கையில் இருந்த சுகன்யாவை அணுகிய அஸ்வினி தேவர்கள், அரசிளங்குமரியே... உன் வயதுக்கும், அழகுக்கும் ஏற்ற கணவன், இந்த முதியவரல்ல; நாங்கள் தான் உனக்கு ஏற்றவர்கள். எங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணம் செய்து கொண்டு, இன்பமாக வாழ்வாயாக... எனக் கூறினர். இதைக் கேட்ட கற்புக்கரசியான சுகன்யா, அவர்களைக் கோபத்துடன் நோக்கி, உடனே இங்கிருந்து சென்று விடுங்கள்; இல்லையேல், என் சாபத்திற்கு ஆளாவீர்கள்! இது, அன்னை பராசக்தி மீது ஆணை! என, எச்சரித்தாள்.

இச்சமயத்தில், தேவர்கள் பூமாரிப் பொழிய, சுகன்யாவின் கற்புநெறியை உலகத்தோர் போற்ற, அம்பிகையும் பிரத்யட்சமானாள். அம்பிகையை சுகன்யா பக்தியுடன் வணங்கி, கணவருக்கு கண்பார்வை அருள வேண்டினாள்.பார்வதியும், அங்கிருந்த குளத்தைக் காட்டி, உன் கணவனின் கைப்பற்றி, இருவருமாக மூழ்கி எழுங்கள்... என, உத்தரவிட்டாள். ஸ்யவன முனிவரும், சுகன்யாவும் குளத்தில் மூழ்கி எழுந்தனர். உலகமே வியக்கும் ஆச்சரியம் நிகழ்ந்தது.
வயோதிக முனிவர் வாலிபனாக, கண்கள் பளிச்சிட, மன்மதனையொத்த அழகுடையவராக மாறியிருந்தார். இருவரும் அரண்மனைக்குச் சென்று, இன்பமாய் வாழ்ந்து சகல சவுபாக்கியங்களும் பெறுவீர்களாக... என, ஆசி வழங்கி, அன்னை பார்வதி மறைந்தாள். சர்யாதா மன்னனும், மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சகல ராஜமரியாதைகளுடன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கற்பு நெறியோடு கணவனும், மனைவியும் பரஸ்பரம் அன்புடனும், அன்னையை வணங்கியும் வாழ்ந்தால், எல்லா குறைகளும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கிட்டும் என்பதை, ஸ்ரீ தேவீ பாகவதம் இக்கதையின் மூலமாக நமக்குத்
தெரியப்படுத்துகிறது.

பூஜிக்கும் முறை : தாம்பாளத்தில், ஐந்து கோணம் வரைந்து, ஐந்து இதழ் தாமரைக் கோலமிட்டு அலங்கரித்து, நடுவிலும், ஐந்து இதழ்களிலும், வெளியில், நான்கு புறமுமாகத் தீபங்கள் ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீ ஸ்வயம்வர பார்வத்யை நமஹ... என, அர்ச்சனை செய்யவும்.

நிவேதனம்: உப்பில்லாமல் உளுந்து வடையும், தேனில் ஊற வைத்த, மொச்சைக்கடலை சுண்டலும் நிவேதனம் செய்யலாம். கூடுதலாக
பட்டாணி சுண்டலும் செய்யலாம்.

பெண்களுக்கு: சுமங்கலிகளுக்கு அரக்குகலர் ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் கொடுக்கவும். ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்யவும்.

சுலோகம்: மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே|
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா||
- தேவி ஸ்தோத்ர மஞ்சரி

மங்களமே வடிவினளாக, மங்களத்திற்கு ஆதாரமாய் இருப்பவளே! சுமங்கலிகளின் மாங்கல்யத்தில் இருந்து அருளுபவளே! தீர்க்க சுமங்கலியாக வாழ, அனுக்கிரகம் செய்ய வேணும் என்ற சுலோகம் சொல்லி,
புஷ்பம் சாத்தவும்.

உளுந்து வடை!

நவராத்திரி ஏழாம் நாளுக்கான நிவேதனம்

நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.

உளுந்து - 250 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 20 கிராம்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு எண்ணெய் - வடை பொரிக்க

தேவையான அளவுஉளுந்தை இரண்டு முறை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிக தண்ணீர் சேர்க்காமல், கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின், மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு
கலக்கவும். வடை சுடுவதற்கான எண்ணெயை, வாணலியில் சூடாக்கவும். வடைகளை தட்டி, நடுவில் சிறிய துளை செய்து, ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும். தங்க நிறத்தில், மொறு மொறுவென வெந்த பின், வடைகளை எடுக்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 3,167.9;
கார்போஹைட்ரேட், 139.9; புரதம், 62.6; கொழுப்பு, 258.0.
* நிவேதனத்திற்கு உப்பு இல்லாமல் நான்கோ, ஆறோ வடை செய்த பின், மக்களுக்கு வினியோகிக்க, உப்பு போட்டு வடை சுட்டுக் கொள்ளலாம்.

சீதாராம் பிரசாத்


தேன் மொச்சை!

தேவையான பொருட்கள்

காய்ந்த மொச்சை - 250 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
தேன் - 150 கிராம்
புதினா - மேலே துாவ

செய்முறை

மொச்சையை, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் தேனை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, மொச்சையை போட்டு வதக்கவும். அடுப்பை அணைத்து விட்டு, புதினா சேர்க்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 1,183.1; கார்போஹைட்ரேட், 230.8; புரதம், 50.5; கொழுப்பு, 9.9.

பட்டாணி சுண்டல்!

தேவையான பொருட்கள்

காய்ந்த வெள்ளை பட்டாணி - 500 கிராம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
துருவிய இஞ்சி - 10 கிராம்
மாங்காய் - 30 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: காய்ந்த வெள்ளை பட்டாணியை, எட்டு மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் தாளிக்கவும்.இதில் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து இறக்கவும். பின், துருவிய தேங்காய் மற்றும் தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்க்கவும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 1,937; கார்போஹைட்ரேட், 266.2; புரதம், 109.1; கொழுப்பு, 43.2.மூன்று வகைகளும், தலா, ஐந்து பேர் சாப்பிடுவதற்கான அளவுகள்.--ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், மயிலாடுதுறை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar