பல்லடம்: சனி பகவான் சாதாரணமானவர் அல்ல என்று, சித்தம்பலத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவின்போது காமாட்சிபுரி ஆதீனம் பேசினார்.
பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. டிச., 26 அன்று மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை விழாவுடன் துவங்கியது. காலை 5 மணிக்கு, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதை முன்னிட்டு, மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேகம், மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன. விழாவை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: சனி என்பவர் கிரகம் அல்ல ஈஸ்வரன். ஈஸ்வரனின் அருள் பெற்றவர் சனி பகவான். சனி பகவான் சாதாரணமானவர் அல்ல. அவரது அருள் இன்றி எதுவும் நடக்காது. எந்த காரியத்தையும் பக்தியுடன் செய்யுங்கள். வீட்டில் செய்வது சாதம்; கோவிலில் வழங்கப்படுவது பிரசாதம். அப்படிப்பட்ட பிரசாதத்தை கடவுளை நினைத்தபடி, அவரை பார்த்துக் கொண்டு உண்ண வேண்டும். தீர்த்தம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை சிவாய நம என்று கூறியபடி ஏற்றுக்கொள்ளுங்கள். கோவில்களுக்கு சென்றால் சுயநலம் பார்க்காதீர்கள். ஒரு புயல் என்றால் இன்னொரு புயல் வருகிறது. கொரோனா பாதிப்பு முடியும் நேரத்தில் இன்னொரு கொரோனா வந்துள்ளது. இவற்றிலிருந்தெல்லாம் கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சனிபகவானுக்கு பரிகார பூஜைகள் செய்தனர். காக வாகனத்தில் சனி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.