பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
09:06
சென்னை:தகுதியான, தற்காலிக கோவில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:கடந்த ஆட்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், 8,700 இடங்கள் மீட்கப்பட்டதாக, முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்றால், சிவகங்கை மாவட்டத்தில், கவுரி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நில ஆக்கிமிரப்பை ஏன் தடுக்கவில்லை?இந்த ஆட்சி வந்த 55 நாட்களிலேயே கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 79 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 520 கோடி ரூபாய். தற்போது, கோவில் சொத்துக்களை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் மீட்கப்படுவதுடன், தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுக்கு ஏற்றபடி, கோவில்களுக்கான திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்த ஆலோசித்து வருகிறோம். அறநிலையத்துறை இணையதளத்தில், கோவில் சொத்துக்கள் விபரம் மட்டுமல்லாமல், வாடகைக்கு வசிப்பவர்களின் விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.நான்கு கோடி பக்கங்கள் உள்ள கோவில் தொடர்பான ஆவணப் பதிவுகளையும், பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. தொலைபேசி புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில், 110 விதியின் கீழ் 2,000 கோவில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவர் என அறிவித்து, செயல்படுத்தவில்லை. இதுகுறித்த ஆய்வில், தகுதியான தற்காலிக பணியாளர்கள், 1,210 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தகுதியானவர்களை, பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் பணி நிரந்தர உத்தரவுகளை முதல்வர் வழங்குவார். ஆனால், சட்ட விதிகளை பின்பற்றாமல், கமிஷனர் அனுமதி பெறாமல், பணி நியமனம் செய்யப்பட்டிருந்தால் ஏற்க இயலாது. மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.ஆய்வின்போது, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், எம்.எல்.ஏ., வேலு, கூடுதல் கமிஷனர் திருமகள், இணைக் கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.