கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் சமண தீர்த்தங்கரர் மகாவீரரை காளியம்மனாக நினைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் பாலாறு செல்கிறது. அக்கிராமத்தின் பாலாற்றுக் கரையில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையை அப்பகுதியினர் காளியம்மனாக நினைத்து கூடம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.
கார்த்திகை மாதத்தில் சொக்கப்பன் கொளுத்தியும் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் ஆய்வு செய்த மதுரை சமண தொல்லியல் சின்ன பாதுகாப்பு மையத்தினர் மணக்குடி மக்கள் வழிபட்டு வந்த சிற்பம் ‛மகாவீரர்’ என்பதை அறிவித்தனர். இதனையடுத்து அங்கு அதற்கான அறிவிப்பு பலகையையும் நிறுவிச் சென்றனர். இது குறித்து அம்மையத்தினர் கூறுகையில்,‛ இப்பகுதியில் சமண மதம் பரவியிருந்தது. இங்கு சமணச்சின்னங்களாக கோயிலாப்பட்டி தீர்த்தங்கரர், குன்றக்குடி மலையடிவார படுகைகள், பூலாங்குறிச்சி மலை சிற்பங்கள் என்று பல இடங்களில் உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய புலவரான கணியன் பூங்குன்றனாரும் சமணரே. அதில் தற்போது மணக்குடி தீர்த்தங்கரர் சிற்பமும் ஒன்று என்றனர். தற்போது மணக்குடியில் உள்ளது 24 வது தீர்த்தங்கரர் எனப்படும் மகாவீரர் சிற்பம். 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் ஒரே பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 அடி உயரமுள்ள இந்த சிற்பத்தில் மகாவீரரின் பரிவார தேவதைகளாக யட்சன் மற்றும் யட்சினியும் இருபுறமும் உள்ளனர். தொங்கிய காதுகளுடன் கூடிய உருவத்தை வைத்து பெண் தெய்வமாக நினைத்து வழிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.