பதிவு செய்த நாள்
04
அக்
2021
01:10
நாகப்பட்டினம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக்கூடாது என நாகை,கலெக்டர் அருண்தம்புராஜ் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,கொரோனா பரவல் நடவடிக்கையாக கோவில்களில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.வரும் 6 ம் தேதி,மகாளய அமாவாசை என்பதால், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் கூடும் வாய்ப்பு உள்ளது.கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களால் கூட்டம் அதிகமாகி,கொரோனா பரவும் சூழல் உள்ளது. வரும் 5 மற்றும் 6 ம் தேதி,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்,கோடியக்காடு அமிர்தகடேஸ்வர சுவாமி கோவில் மற்றும் ஏரிவித்யேஸ்வர கோவில்களில்,கோவில் அர்ச்சகர்கள்,கோவில் பணியாளர்கள் மட்டும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்தலாம்.பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சென்று நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு கலெக்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.