பதிவு செய்த நாள்
13
நவ
2021
09:11
தஞ்சாவூர், தஞ்சாவூரில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1036 வது சதய விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று, அவரின் 1036-வது சதய விழா நேற்று காலை 6 மணிக்கு பெரியகோவிலில் மங்கள இசையுடன் துவங்கியது. இதையடுத்து கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர், தேவாரம் நுாலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து, நந்தி மண்டபத்தில் பாராயணத்தை பாடினர்.
இதனைத் தொடர்ந்து கோவிலின் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சதய விழாக்குழு தலைவர் செல்வம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, குஜராத்திலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன், உலோகமாதேவி உலோகசிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 38 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை கோவிலின் பிரகாரத்தில், ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெறுகிறது. ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.