திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் அளவீடு செய்தனர்.
மணலூர்பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த பிரயோக வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இதை தனி நபர்கள் பலரும் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் தலைமையில் நில அளவையர்கள் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி மூலம் அளவீடு மேற்கொண்டனர். ஆய்வின்போது திருக்கோவிலூர் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.