திருக்கோஷ்டியூரில் டிச.23ல் பகல் பத்து துவக்கம்: ஜன.2 இரவில் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 03:12
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.23ல் பகல் பத்து உத்ஸவம் துவங்குகிறது. ஜன.2 இரவில் சொர்க்க வாசல் திறக்கப்படும். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யான உத்ஸவம் 20 நாட்கள் நடைபெறும். டிச. 23ல் பகல் பத்து உத்ஸவம் துவங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், யாகசாலை பூஜைகள் நடந்தும் காப்புக்கட்டப்படும். தொடர்ந்து தினசரி காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெறும். ஜன.1 ல் பகல் பத்து நிறைவடைகிறது. ஜன. 2ல் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை முன்னிட்டு காலையில் திருமாமணி மண்டபத்தில் உபயநாச்சிமார்களுடன் உற்ஸவர் சயன கோலத்திலும், மாலையில் அமர்ந்த கோலத்தில் ராஜாங்க சேவையிலும் அருள்பாலிக்கிறார். இரவில் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து உச்சிகால பூஜைகள் நடக்கும். பின்னர் இரவு 11:30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கடந்து செல்கிறார். பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கி தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெறும்.