பதிவு செய்த நாள்
07
ஜூலை
2023
10:07
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த ஜூன் 20 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பெண்கள் கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 3 கிராம தெய்வங்களுக்கு கே.அய்யாபட்டி, பெரிய கோம்பைப்பட்டி, பாப்பம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கடுகாபட்டி, சரளப்பட்டி, சின்ன கோம்பைபட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளம் முழங்க பழம் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் அலங்கார நகை பெட்டி அழைத்துச் சென்று,அம்மன் கரகம் பாலித்து சப்பரத்தில் பவனி வந்தது. அதனைத் தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து படுகளம் போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை கோவிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அம்மன் கரகம் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.