பதிவு செய்த நாள்
07
ஜூலை
2023
01:07
திருவொற்றியூர், திருவொற்றியூர் - காலடிப்பேட்டை, வன்னியர் தெருவில், பழமையான திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் அக்னி வசந்த மஹோற்சவ விழா நடப்பது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு விழா, ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை வேளைகளில், சுவாமி திருவீதி உலா நடந்தது. விழா நாட்களில், காலை மற்றும் மாலை வேளைகளில், போத்தராஜா ஊர்வலமும் நடைபெறும். இந்த கோவில் திருவிழாவின் 11 நாட்கள் சிறப்பை, உற்சவர் அலங்காரம், மஹாபாரத விரிவுரை, கவிபாடுதல் மற்றும் தெருக்கூத்து வாயிலாக, பக்தர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி, விபூதி வள்ளல் தொண்டர் புலவர் கோவிந்தசாமி, மஹாபாரத விரிவுரையும், இசைமாமணி தேவேந்திரன் பாடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன.
பாராட்டு: மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து குழு சார்பில், 10 நாட்கள் மஹாபாரத கூத்து நடந்தது. இரவு 10:00 மணிக்கு மேல் ஆரம்பித்து, விடிய விடிய நடக்கும் கூத்தை காண, மக்கள் திரள்கின்றனர். மொபைல் போனில் மூழ்கி போன இன்றைய தலைமுறையினருக்கு, 10 நாட்கள் மஹாபாரத தெருக்கூத்து, வினோதமாகவும், மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு பின், தெருக்கூத்து நிகழ்வை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொண்ட ஆலய நிர்வாகத்தினரை, அனைவரும் பாராட்டினர்.