கோயில் பொழுதுபோக்கும் இடம் அல்ல; புரி ஜெகநாதர் கோயிலில் ஆடை கட்டுப்பாடு தீவிரம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 01:10
புரி ஜெகநாதர் கோயிலில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தீவிர ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் புரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நீண்ட வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரையில் புரி நகரம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது ஜகந்நாதர் கோயில். இக்கோயில் கி.பி. 12 நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜன.,1ம் தேதி முதல் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாக குழு தலைவர் கூறியதாவது; கோயில் பொழுதுபோக்குக்கான இடம் அல்ல. கோயிலில் சிலர் அநாகரிகமான உடை அணிந்து வருவதால் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் கண்ணியம், புனிதத்தை காப்பது பொறுப்பு எனவே கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார்.