பதிவு செய்த நாள்
09
டிச
2023
05:12
கோவில்களின் ஸ்தல புராணங்கள் மாற்றி எழுதப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த செப்., மாதம் அறநிலையத்துறை கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கோவில்களின் தல வரலாறு தயார் செய்வதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. தலவரலாற்றில் கோவில் சார்ந்த கல்வெட்டுக் குறிப்புகள் இடம் பெற வேண்டும்; ஆங்கில மொழியாக்கம் செய்ய வேண்டும். கோவில்கள் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் இணைக்க வேண்டும்; என்பது உள்ளிட்ட, 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மூன்று மாதங்களுக்குள் இப்பணியினை முடிக்க உத்தரவிடப்பட்டது. அப்பணிகளை மேற்கொள்ள ஊக்கத்ததொகை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவில்களின் ஸ்தல புராணம் காலத்திற்கு ஏற்றபடி மாற்றி எழுத அறநிலையத்துறை முனைந்துள்ளது. இதை ஆன்மிகப் பெரியவர்கள் இதில் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் திராவிட கண்ணோட்டத்தில் ஸ்தல புராணம் மாற்றி எழுதப்பட்டு விடும் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வைரலானது. இதற்கு விளக்கம் அளித்து அறநிலையத்துறை சார்பில் கூறியிருப்பதாவது:ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் முக்கியத்துவமான பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட தலங்களுக்குப் புராணங்கள், தல வரலாறுகள் காலத்திற்கு ஏற்ற வகையில் எளிய நடையில் இல்லை. மேலும், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் தேவை உணர்ந்து கோவில் தல வரலாற்றை மொழியாக்கம் செய்து ஆங்கிலத்திலும் வெளியிடும் தேவை உள்ளது. தொன்மையான செய்யுள் நடை புரியவில்லை என மொழி பெயர்க்க யாரும் முன்வரவில்லை. எனவே, எளிமையான நடையில் அனைத்து கோவில்களுக்கும் தலவரலாறுகளை எழுத வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டது. தல வரலாற்றுக்காக குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, புராணக் கூறுகளில் எவ்வித சிறு மாற்றமும் இன்றி, தற்காலத் தமிழில் தல வரலாறுகள் எழுதப் பணிக்கப்பட்டுள்ளன. இதற்கு அந்தந்த கோவில் அருகில் வசித்து வரும் சிறந்த தமிழறிஞர்கள், ஆன்மிக ஆய்வாளர்களையும் தேர்ந்தெடுத்து இப்பணிகளை மேற்கொள்ள ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, கல்வெட்டுத் தரவுகள், சுவடிகள், செப்பேடுகள், சுவரோவியத் தகவல்களுடனும் நல்ல புகைப்படங்களுடனும் தலவரலாறு தொகுத்து வெளியிடும் வகையில் எழுதப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பேசப்படுவது போல புராணங்கள் மாற்றி எழுதப்படுவதாக கூறுவது உண்மையல்ல. புராணங்களை யாரும் மாற்றி அமைக்க முடியாது அது மாறாதது. இந்த ஆக்கப்பூர்வமான பணிகளை இழிவு படுத்த வேண்டாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.