சென்னை; சென்னையில் முதல் முறையாக, மூன்று நாள் பத்ராசல ராமர் தரிசனம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு ‘பக்த பாத சேவா அறக்கட்டளை’ சார்பில் தி.நகர், சவுத் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதில், பத்ராசல ராமர், 20 அடி உயர அனுமன் தரிசனம் தருகின்றனர்; இலவசமாக தரிசிக்கலாம். முதல் நாள் நிகழ்வான நேற்று காலை சுப்ரபாதத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து உபன்யாசம், புத்ர காமேஷ்டி யாகம் நடந்தது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை, 10:30 மணிக்கு சீதா தேவிக்கு, 1,008 புடவை அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து பரத நாட்டியம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு சீதா கல்யாணம் நடக்கிறது. பின், ராமர் விசேஷ ஆரத்தி நடக்கிறது. நாளை காலை 7:30 மணிக்கு ராம நாம மகிமை உபன்யாசம் நடக்கிறது. தொடர்ந்து ஹரி நாம சங்கீர்த்தனை, ராம பட்டாபிஷேகம் நடக்கிறது.