சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை; ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16ல் நடை திறப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 10:08
சபரிமலை; சபரிமலையில் நேற்று நடந்த நிறைப்புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கேரள பூஜை விதிகளை பின்பற்றும் கன்னியாகுமரி மாவட்ட கோயில்களிலும் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
விவசாயம் செழிக்கவும், மக்களுக்கு வளமான வாழ்க்கை வேண்டியும் வயலில் விளையும் நெற்கதிர்களால் நிறை புத்தரிசி பூஜை ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் நடக்கிறது. சபரிமலை நடை இதற்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அப்போது அச்சன்கோயில், பாலக்காடு வயல்களில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு தலை சுமடாக கொண்டு வரப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து நிறைப்புத்தரிசி பூஜைகளுக்கான சடங்குகள் துவங்கின. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி பூஜிக்கப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்த பின் அதை ஸ்ரீ கோயிலுக்குள் கொண்டு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அந்த நெற்கதிர் வெளியே கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் சபரிமலையில் கூடினர். நேற்று வழக்கமான உஷபூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, படி பூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஆக., 16 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். கேரள பூஜை விதிகளை பின்பற்றும் கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்களிலும் நேற்று புத்தரிசி பூஜைகள் நடந்தன. இப்பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.