பதிவு செய்த நாள்
26
செப்
2024
10:09
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி நாளாகும். கடந்த எட்டு நாட்களாக மஹாளய பக்ஷம் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் .
மகாளய பட்சத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். இந்தச் சுமங்கலி பிரார்த்தனை சிராத்தத்திற்கு சமமானது.நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
சுமங்கலி பிரார்த்தனை: சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது. நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல கணவரை அடைந்து கணவரின் கோபதாபங்களையும் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தைத் தூணாக நின்று காப்பாற்றி அனைவரையும் ஒன்றிணைத்து, முக்கியமாக நமது கலாசாரத்தையும், வைதீக தர்மங்களையும், ஸம்ப்ரதாயங்களையும் கடைப்பிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டு மாகப் பரமபதம் அடைவது. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக இறந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு சிராத்தத்திற்கு மறுநாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்யப்பட வேண்டும். மகாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். இன்று நவமி திதி இன்று இதை செய்ய முடியாதவர்கள், அமாவாசை அன்றோ, வரும் நவராத்திரியில் ஓர் நாளோ செய்யலாம்.