காயல்பட்டணம்:தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ளதையடுத்து தேவையான அளவு மழை வேண்டி காயல்பட்டணம் ஜூம்ஆ தொழுகையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. காயல்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் துவங்கிய வடகிழக்குப் பருவமழை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் ஒரு சில நாட்களே வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல், வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேவையான அளவுக்கு பருவமழை வேண்டி, நேற்று காயல்பட்டிணம் அல்ஜாமிஉல் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில், ஜூம்ஆ தொழுகையின் போது மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. ஜூம்ஆ தொழுகையை வழிநடத்திய அப்பள்ளியின் கத்தீப்மவ்லவீ முஹம்மத் பாரூக் அல்பாஸீ, ஜூம்ஆ தொழுகையில் மழை வேண்டி குனூத் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.