ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வெளிக்கோடை; தாயார் பூச்சாற்றுதல் உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2025 10:05
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை , இரண்டாம் திருநாளில் சிறப்பு அலங்காரத்தில் சேவை நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் 14ம் தேதி தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி பின் மாலை 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.