ஆதி வைத்தியநாதர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முருகன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2025 10:10
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற 5 வைத்தியநாத சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் மண்ணிப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் செவ்வாய் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கின்றது. இங்கு முருகன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருக பெருமான் வள்ளி தெய்வானை உடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஊர் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வர, வசந்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓத மாங்கல்ய தாரணம் எனப்படும் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்கல்யாணம் உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.