திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா; மலைமேல் மகா தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2025 06:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் இன்று காலை கார்த்திகை தேரோட்டமும் மாலையில் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். நாளை (டிச. 4) தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
தேரோட்டம்: இன்று காலை 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் முத்தங்கி அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் தேரோட்டம் நடந்தது.
மஹா தீபம்: தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் வழங்கப்பட்ட 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்னேமுத்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 450 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரைக்கு பூஜைகள் நடந்தது. பின்பு தாமிரக் கொப்பரை நெய் திரி சூடம் ஆகியவை மலை மேல் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மண்டபத்தின் மேல் கொப்பரை வைத்து நெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்ற தயாராக வைக்கப்பட்டது. கோயிலுக்குள் அனுக்கை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. அதே நேரத்தில் மலை மேல் தீப மண்டபம் அருகில் உள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனைகள் முடிந்து தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலை மேல் மாலை 6:15 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயிலில் மூலவர் சுப்ரமணிய சுவாமி முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது.
குன்றத்தில் குவிந்த பக்தர்கள்: திருப்பரங்குன்றம், மதுரை, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாகவந்து மலை சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.