திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 04:02
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், 13 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும், காலை, மாலையில் விஜயராகவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக வருகிறார். இதில், மூன்றாவது நாள் உத்சவமான கடந்த 15ம் தேதி காலை கருடசேவையும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது. ஏழாம் நாள் பிரபல உத்சவமான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய விஜயராகவ பெருமாள் முக்கிய வீதி வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதணை காண்பித்து வழிபட்டனர். வரும் 25ம் தேதி விடையாற்றி உத்சவத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.