பெருமாள் கோயில் கருவறையில் கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2026 10:02
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அதுகுறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டார். ஆய்வில் சிவன் கோயில் கற்களில் இருந்து பெருமாள் கோயில் கட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு. இவரது வீட்டின் எதிரில் சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. பிப்.,13ல் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகளின் போது பாலாலயம் செய்து சுவாமி, கருவறையில் இருந்து மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் கருவறையில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். கருவறையின் உட்புறச் சுவரில் சில தமிழ்க் கல்வெட்டுத் துண்டுகள் இருப்பதை அறிந்தார்.
உடனே மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும், தொல்லியல் அறிஞருமான சாந்தலிங்கத்தை தொடர்பு கொண்டு படி எடுத்துப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த 5 கல்வெட்டுகளைப் படி எடுத்தனர். அதில் ஒரு கல்வெட்டு முழுமையாக இருந்தது. அதில் குலசேகர பாண்டியரின் நான்காவது ஆட்சி ஆண்டில், கற்குறிச்சி ஈஸ்வரன் என்னும் சிவன் கோயிலில் அர்த்தமண்டபத்தில் நிலை கல் அமைத்த செய்தி இடம் பெற்றிருந்தது. மற்ற கல்வெட்டுகள் துண்டுகளாக இருந்ததால் முழு விபரம் அறியமுடியவில்லை. கல்வெட்டு எழுத்துகளை படித்தறியும் திறனுள்ள அமைச்சர் தங்கம்தென்னரசு, முழு கல்வெட்டை படித்ததில், கல்குறிச்சியில் இடிந்த சிவன் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை கொண்டு 13ம் நுாற்றாண்டில் பாண்டியர் மன்னர் ஆட்சியில் சென்னசேகவ பெருமாள் கோயில் கட்டப்பட்டது தெரியவந்தது. கல்குறிச்சி ஊர் மல்லாங்கிணற்றில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது.